கணவன்–மனைவி தற்கொலை… சாமி படத்துக்கு அருகே இருந்ததைக் கண்ட போலீசார் அதிர்ச்சியில்…!


சென்னை திருமங்கலம் அருகில் உள்ள பாடிக்குப்பம், பாடி புதுநகர் 18–வது தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி(வயது 67). இவருடைய மனைவி கோதை(58). இவர்களுக்கு வினோத்(40), ராஜேஷ்(38) என 2 மகன்கள் உள்ளனர்.

இருவருக்கும் திருமணமாகி, குடும்பத்துடன் வினோத் முகப்பேர் பகுதியிலும், ராஜேஷ் அயப்பாக்கம் பகுதியிலும் வசித்து வருகிறார்கள். இதனால் குப்புசாமி–கோதை இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

இந்த வயதிலும் குப்புசாமி, திருமங்கலம் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். மகன்கள் இருவரும் அடிக்கடி வந்து பெற்றோரை பார்த்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் குப்புசாமி வீடு திறக்கப்படவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் பலமுறை கதவை தட்டிப்பார்த்தும் கதவை திறக்கவில்லை.

குப்புசாமியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது, அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், ஜெ.ஜெ.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.


சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள அறையில் குப்புசாமியும், அவருடைய மனைவி கோதையும் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் இருவரும் ஒரே நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளனர். இது குறித்து அவர்களின் மகன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக இருவரும் குடும்பத்துடன் பதறி அடித்துக்கொண்டு வந்து பெற்றோரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து போலீசார், தற்கொலை செய்த கணவன்–மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

பின்னர் அவர்கள் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள், தற்கொலை செய்து கொண்ட அறையில் சாமி புகைப்படத்துக்கு அருகே இருந்த நோட்டில், குப்புசாமி எழுதிய 3 பக்க உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அந்த கடிதத்தில் குப்புசாமி எழுதி இருந்ததாவது:– எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதனால் என் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.


4 வருடம் முன்பு கீழே விழுந்த எனது மனைவிக்கு கால் ஒடிந்ததால் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. எனக்கும் நோய் தொல்லை கடுமையாக உள்ளது.

எனது மகன்கள் இருவருக்கும் தொல்லை தரக்கூடாது என்பதற்காக நான் காவலாளி வேலைக்கு செல்கிறேன். பாவம் எனது மகன்களும் கஷ்டப்படுகிறார்கள். இந்தநிலையிலும் எங்களுக்கு அவர்கள் உதவி செய்கிறார்கள்.

இனியும் நாங்கள், அவர்களுக்கு தொல்லை தர விரும்பவில்லை. அவர்களும் குடும்பத்தை நடத்த கஷ்டப்படுகிறார்கள். ஆகவே நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துவிட்டோம்.

நான் சிறுக, சிறுக சேமித்து இந்த வீட்டுக்கு முன்பணம் கொடுத்து உள்ளேன். அதை பெற்று எனது மகன்களிடம் கொடுக்கவும். என்னுடன் வேலை பார்க்கும் நண்பர் ராஜசேகருக்கு தெரியும்.

நான் இந்த மாதம் 25 நாட்கள் வேலை செய்து உள்ளேன். அதற்கு சம்பளம் ரூ.7,500 வரும். அதை வினோத்திடம் கொடுக்கவும். நாங்கள் யாருக்கும் கஷ்டமாக இருக்க விரும்பவில்லை.

இவ்வாறு அதில் உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக ஜெ.ஜெ. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!