பெங்களூர் சிறையில் நடந்தது என்ன? சசிகலாவை சந்தித்த தினகரன்..!!


ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை நேற்று டிடிவி தினகரன் சந்தித்து பேசியுள்ளார்.

கடந்தமுறை ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் போட்டியிட்டதற்கு பின்புதான் சசிகலா குடும்பத்தினருக்கு பல பிரச்சனைகள் வந்தது. ஒரு பக்கம் வருமான வரிச்சோதனையை மத்திய அரசோடு கையில் எடுக்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசி குடும்பத்தினர் நடத்தி வந்த மிடாஸ் மதுபான ஆலைக்கு செக் வைத்தது. தங்களது தொழில்கள் அனைத்தும் முடங்குவதற்கு தினகரனே காரணம் என மன்னார் குடி வட்டாரம் அதிருப்தியில் இருக்கிறது.

தற்போது ஆர்.கே.நகர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடுவேன் என தினகரன் அறிவித்துவிட்டார். எது நடந்தாலும் விட்டு விலகி விடக்கூடாது என்கிற மனநிலையில் தினகரன் இருக்கிறார். அந்நிலையில்தான், சிறையில் தன்னை சந்திக்க வந்த சிலரிடம் ‘ இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டியிடுவது நல்லதல்ல. அவரிடம் கூறுங்கள்’ என சசிகலா கூறிவந்தார்.


இந்நிலையில்தான், நேற்று பெங்களூர் சென்ற தினகரன் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, இரட்டை இலையை எதிர்த்து போட்டியிடாதே. அது அக்காவை எதிர்த்து போட்டியிடுவதற்கு சமம். நாம் எதிர்ப்பது பாஜகவைத்தான். மேலும், ஏற்கனவே மத்திய அரசு நமக்கு பல வகைகளில் குடைச்சல் கொடுத்து வருகிறது. தற்போது எடப்பாடியும் நம் மீது நடவடிக்கையை தொடங்கிவிட்டார். எனவே, நீ தேர்தலில் நிற்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தும். நீ வெற்றி பெற்றாலும் இரட்டை இலை தோற்றது போல் ஆகிவிடும். எனவே இப்போது பொறுமையாக இரு. அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்’ என சசிகலா கூறினாராம்.

ஆனால், நான் இரட்டை இலையை மீட்கவே அந்த சின்னத்தை எதிர்த்து போட்டியிடுகிறேன். இப்போது நாம் அமைதியாக இருந்துவிட்டால், நம்மை அரசியலில் இருந்தே விரட்டி விட்டதாக அவர்கள் பேசுவார்கள். மேலும், இப்போது விட்டால் பிடிக்க முடியாது. எனவே, அரசியலில் நான் இருக்க வேண்டியது அவசியம்’ என உறுதியாக கூறிவிட்டாராம்.

Source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!