சீரடி சாய் பாபா தட்சணை பெற்று நிகழ்த்திய அதிசயங்கள்..!


இன்று கொடுப்பவர் நாளை பெறுகிறார். இன்று விதைத்தவர் நாளை அமோகமாக அறுவடை செய்கிறார். செல்வம் என்பது தர்ம காரியங்களுக்கு ஒரு சாதனம். நீங்கள் எப்போதாவது கொடுக்காததை இப்போது பெறுவதில்லை. எனவே பெறுவதற்கு சிறந்த வழி கொடுப்பதுதான். கொடுப்பதும், வாங்குவதும் முன்பே உள்ள ஒரு பந்தத்தால் நடக்கிறது என்று சாய்பாபா அடிக்கடி தம் பக்தர்களிடம் சொன்னார்.

அதை பாபா தம் தினசரி வாழ்வில் நடைமுறைப்படுத்தியும் காட்டினார். பாபா சீரடிக்கு வந்த புதிதில் யாரிடமும், எதுவுமே கேட்கவில்லை. சாப்பாடு கூட அவர் கேட்டு வாங்கி சாப்பிட்டதில்லை.

துவாரகமயி மசூதியில் வசிக்கத் தொடங்கிய பிறகு பாபா தனது பக்தர்களுக்கு சக்திமிக்க உதி எனும் சாம்பலை பிரசாதமாக வழங்கினார். அந்த சமயங்களில் பக்தர்களில் யாராவது ஓரிருவர் பாபா முன்பு செப்புக் காசுகளை வைத்து விட்டு செல்வார்கள். முதலில் சாய்பாபா அதை கண்டுகொள்ளவில்லை. பிறகு அவர் அந்த நாணயங்களை கையாளத் தொடங்கினார். தன் முன்பு ஒரே ஒரு செப்புக்காசு வைக்கப்பட்டால் அதை எடுத்து தன் கபினி உடை சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்வார்.

இரண்டு செப்புக் காசுகள் வைக்கப்பட்டால், அதை எடுத்து ஆசீர்வதித்து, வைத்தவரிடமே திருப்பிக் கொடுத்து விடுவார். பாபா தான் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளும் செப்புக் காசுகளை உதி நெருப்புக் குண்டத்துக்கு தேவையான விறகுகள் வாங்குவார்.

பாபாவுக்கு களிமண் குழாயில் புகையிலையை அடைத்து புகைப்பது என்றால் மிகவும் இஷ்டம். எனவே மீதம் இருக்கும் செப்புக்காசில் புகையிலை வாங்குவார். சில சமயம் தீபம் ஏற்றுவதற்கான எண்ணெய் வாங்குவதற்கு எல்லா காசுகளையும் செலவு செய்து விடுவார்.
ஒரு நாள் கூட அவர் தமக்காக பணத்தை சேர்த்து வைத்ததே இல்லை. அதற்கான அவசியமும் அவருக்கு இருந்ததில்லை.


சாய்பாபாவின் புகழ் மராட்டியம் மாநிலத்தையும் கடந்து மற்ற பிரதேசங்களுக்கும் பரவியபோது அவரை பார்த்து ஆசி பெற தினம், தினம் நூற்றுக்கணக்கானோர் வந்தனர். அந்த காலத்தில் மகான்களையும், சித்தப்புருஷர்களையும் வெறுங்கையோடு சென்று பார்க்க மாட்டார்கள். பழம் அல்லது பணம் கொடுத்து பய பக்தியோடு ஆசீர்வாதம் பெறுவார்கள்.

இந்த நிலையில்தான் பாபாவிடம் “எங்கே எனக்குரிய தட்சணை. கொடுத்து விட்டுப் போ” என்று கேட்கும் பழக்கம் தோன்றியது. பணக்காரர் – ஏழை, இந்து- முஸ்லிம், தெரிந்தவர் – தெரியாதவர் என்றெல்லாம் எந்த பாகுபாடும் பார்க்காமல் அவர் “குருதட்சணை” கேட்டார்.

பாபாவை பார்க்க வேண்டுமா? தட்சணை கொடுக்க வேண்டும். பாபாவுக்கு சந்தனம் கொடுத்து அட்சதை தூவ வேண்டுமா? தட்சணை கொடுக்க வேண்டும். பாபாவுக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டுமா? தட்சணை கொடுக்க வேண்டும்.

இப்படி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பாபா தட்சணைப் பெற தவறவில்லை. பாபா பின்பற்றிய இந்த வழக்கம் முதலில் சில காலத்துக்கு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

உலக சுகங்களைப் புறக்கணித்த சாதுவான, கண்கண்ட தெய்வமான, அவதாரப் புருஷரான சாய்பாபா ஏன் இப்படி பணம், பணம் என்று தட்சணை கேட்டு வாங்குகிறார் என்று ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டனர். உண்மையிலேயே பாபா, ஆசையை முற்றும் துறந்தவர்தானா என்றும் சந்தேகத்தில் கேள்வி எழுப்பினார்கள்.

ஆனால் பக்தர்கள் மனதில் அலையடித்த இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் விரைவில் விடை கிடைத்தது. தட்சணையை மிகவும் கறாராக பாபா பெற்றதற்கு பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன தெரியுமா?


* மக்களிடம் பணம் மீது இருக்கும் மோகம் குறைய வேண்டும்.
* பணத்தை தர்மம் செய்வதன் அவசியத்தை உணர வேண்டும்.
* பிறருக்கு பணம் கொடுக்கும் போது பணிவுடனும், தாராள மனதுடனும் இரக்கத்துடனும் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட வேண்டும்.
* பணம்தான் பிரதானம் என்று நினைக்காமல் மனம் தூய்மை அடைய வேண்டும்.
* நீ பெறுவதை விட அதிகமான அளவில் கொடு. அப்படியானால் நீ கொடுப்பதை விட அதிக அளவில் மீண்டும் பெறுவாய் என்பதை உணரவும்.

– இப்படி பல்வேறு விஷயங்களை சராசரி மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே பாபா தனது பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக தட்சணை பெற்றார். இதன் மூலம் மிக முக்கியமான ஒரு கருத்தை பாபா தெளிவு படுத்தினார்.

அதாவது தட்சணை வழங்குவது ஆன்ம அறிவை பெறுவதற்கான ஒரு உபாயம் என்ற தெளிவு பக்தர்கள் மத்தியில் பரவியது. இந்த தெளிவு பிறந்த பிறகு பக்தர்கள் பாபாவை பார்க்கும் போதெல்லாம் தட்சணை கொடுத்து மகிழ்ந்தனர்.

உலக வாழ்வியலை பக்தர்கள் எளிதாக புரிந்து கொண்டார்கள் என்பதை அறிந்த பாபா மகிழ்ச்சி அடைந்தார். என்றாலும் தினம், தினம் புதிதாக அசுரத்தன்மையுடன் வருபவர்களை தெய்வத் தன்மைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் பாபா தொடர்ந்து தட்சணைப் பெற்றார்.

ஆன்ம மேம்பாடு அடைய விரும்புபவர்களிடம் காமம், கோபம், பேராசை இருக்கக் கூடாது. இம் மூன்றையும் தம் பக்தர்களிடம் இருந்து அகற்றவே பாபா தட்சணை பெற்றார்.


பாபா எல்லாரிடமும் தட்சணை பெறவில்லை. சிலர் கொடுத்த தட்சணையை அவர் வாங்க மறுத்து விட்டார். சிலரிடம் அவர் கடன் வாங்கியாவது தட்சணை கொடு என்பார். சிலர் தட்சணையுடன் விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் கொடுப்பதுண்டு. அவர்களிடம் பாபா தனது தகர குவளையைக் காட்டி, “எனக்கு இது போதும், ஏன் கண்டதையெல்லாம் கொடுத்து என்னைத் தொல்லைப் படுத்துகிறீர்கள்?” என்பார்.

சிலரிடம் “உன் தட்சணை தேவை இல்லை” என்று கோபத்தில் விரட்டுவார். சில சமயம் நல்ல வசதி படைத்தவர்கள் நிறைய தட்சணை கொடுக்கிறோம் என்ற கர்வத்துடன் ஆணவமாக பாபாவிடம் நெருங்குவதுண்டு. அதை புரிந்து கொள்ளும் பாபா, அவர்கள் கையில் வைத்திருக்கும் பணம் முழுவதையும் தட்சணையாக வாங்கி தண்டனை கொடுத்துள்ளார். அந்த வகையில் நிறைய பணக்காரர்கள் பாபாவிடம் வந்து தட்சணை கொடுத்து ஆணவத்தை அழித்து விட்டு நல்ல மனிதர்களாக மாறியுள்ளனர்.

அவர் யாரிடம் எல்லாம் மனம் உவந்து தட்சணை பெற்றாரோ…. அதற்கு ஏற்ப அற்புதங்கள் நடந்தது. அரசு ஊழியரிடம் அவர் ரூ.5 தட்சணை வாங்கினால் அவருக்கு ரூ.10 சம்பள உயர்வு கிடைத்தது. வசதி படைத்தவர்கள் ரூ.50 தட்சணை கொடுத்தால், தொழிலில் ரூ-.100 லாபம் பெற்றனர். சிலரிடம் அவர், “ஆறு ரூபாய் தட்சணை கொடு” என்று வலியுறுத்தி கேட்பார்.

அதற்கு காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாச்சரியம் ஆகிய 6 வேண்டாத குணங்களை விட்டு விடு என்று பாபா சொல்வதாக அர்த்தமாகும். சில ஏழைகளிடம் பாபா தட்சணையை வற்புறுத்தி கேட்டுப் பெற்றதுண்டு. இதன் மூலம் அந்த ஏழைகளுக்கு ஏற்பட்டிருந்த கிரக தோஷங்கள் நீங்கியது பிறகுதான் தெரிய வந்தது. தட்சணை பெற்று பாபா தோஷத்தை விரட்டினார் என்ற உண்மை சில வருடங்களுக்கு பிறகே பக்தர்களுக்கு தெரிய வந்தது.

தட்சணை பெறும் விஷயத்தில் இப்படி பலவிதமாக நடந்து கொண்ட பாபா, அந்த பணத்தை எல்லாம் ஏழைகளுக்கும், பொது சேவைக்கும் பயன்படுத்தினார். ஒவ்வொரு நாளும் அவர் தட்சணை பணத்தை மீதம் வைக்காமல் பிரித்துக் கொடுத்து விடுவார்.

சில சமயம் எல்லா பணமும் வினியோகிக்கப்பட்ட பிறகு சில ஏழைகள் வந்து பாபாவிடம் பணம் கேட்பதுண்டு. உடனே பாபா கையை மூடி திறந்து போடுவார். அவர் உள்ளங்கையில் இருந்து காசுகள் வந்து விழும்.


தினமும் அவருக்கு அதிகபட்சமாக 100 ரூபாய்தான் தட்சணை கிடைத்தது. ஆனால் அவர் பகிர்ந்து கொடுக்கும் பணத்தின் மதிப்பு ரூ.300-ஐ தாண்டும். அது எப்படி என்று இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. ஒரு காலக்கட்டத்துக்குப் பிறகு தட்சணை பணத்தை குறிப்பிட்ட சிலருக்கு தவறாமல் கொடுத்தார். தன்னுடன் எப்போ தும் இருக்கும் படேபாபாவுக்கு ரூ.55 கொடுப்பார். தத்யா பாட்டீல் கோடேக்கு ரூ.35, பாயாஜி பாட்டீலுக்கு ரூ.4, தொழு நோயாளியான பாகோஜி ஷிண்டேக்கு ரூ.4, ஜமாலி முஸ்லிம் பெண்ணுக்கு ரூ.7, லட்சுமிபாய்க்கு ரூ.4, ராம்சந்தர் பாட்டீலுக்கு ரூ.4 கொடுத்தார்.

இரவில் தன் காலைத் தொட்டு வணங்கும் ஒவ்வொருவருக்கும் அவர் தலா ஒரு ரூபாய் கொடுத்து ஆசீர்வாதம் செய்தார். அவர் மகா சமாதி அடையும் நாள் வரை 12 ஆண்டுகள் இந்த பழக்கத்தை வைத்திருந்தார். இந்த 12 ஆண்டுகளில் சாய்பாபா 13 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயை தட்சணையாக பெற்று வினியோகித்ததாக கணிக்கப்பட்டுள்ளது.

பாபா சிலரிடம் செப்புக் காசுகளைக் கொடுக்கும் போது, “இந்த காசை பத்திரமாக வைத்துக் கொள்” என்பார். சிலரிடம் காசுகளை கொடுத்து, “இந்த காசுகளுக்கு தினமும் பூஜை செய்” என்பார்.

இதன் மூலம் பாபா தன் கையால் தொட்டுக் கொடுக்கும் ஒவ்வொரு காசும் புனிதமும், மகத்துவமும் நிறைந்தது என்பதை உணர்த்தினார். அதை புரிந்து கொண்ட பலர், பாபா கொடுத்த செப்புக் காசுகளை பத்திரப்படுத்தி பூஜை செய்தனர். சீரடியில் உள்ள சிலர் வீடுகளில் அந்த செப்புக் காசுகள் வாரிசுகளால் வழிபடப்பட்டு வருகிறது.

தட்சணை பெற்று சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். பாபாவுக்கு தட்சணை கொடுத்த ஒவ்வொருவரும் அதை இரட்டிப்பாக திரும்பப் பெற்றனர். இந்த அற்புதம் இப்போதும் கூட நடக்கிறது. பாபா ஆலயங்களுக்கு மனம் உவந்து பணிவிடை செய்பவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகிறது. இது நிதர்சனமான உண்மை.

அதனால்தான் இப்போதும் பலர் சீரடி தலத்தில் காசுகளை வைத்து பூஜித்து, அதை பொக்கிஷமாக கருதி வழிபடுகிறார்கள். இவையெல்லாம் பாபாவின் தட்சணை பழக்கத்தின் மரபாக உள்ளது. பாபா தன் வாழ்நாளில் தட்சணை பெற்று நிகழ்த்திய அதிசயங்கள் போல யோகா கலை மூலமாகவும் அற்புதங்கள் செய்தார்.-source : maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!