அரசு நிதி மோசடி வழக்கு – கோத்தபய ராஜபக்சே நீதிமன்றத்தில் மேல்முறையீடு…!


இலங்கையில் 2015–ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியைத் தழுவினார். வெற்றி பெற்ற சிறிசேனா அதிபர் ஆனார். அதைத் தொடர்ந்து ராஜபக்சே குடும்பத்தாரின் ஊழல்கள் அம்பலத்துக்கு வந்தன.

அவற்றின் மீது சிறிசேனா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ராஜபக்சேயின் மகன்களும், தம்பி பசில் ராஜபக்சேயும் சில காலம் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜபக்சேயின் மற்றொரு தம்பியான கோத்தபய ராஜபக்சே மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் ராணுவ மந்திரியான இவர், அரசு நிதி ரூ.9 கோடியை தவறாக பயன்படுத்தி தனது பெற்றோரின் நினைவுச் சின்னத்தை உருவாக்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டில் அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், தன்னை கைது செய்யக்கூடாது என கூறி இடையீடு மனு ஒன்றை இலங்கை அப்பீல் கோர்ட்டில் கோத்தபய ராஜபக்சே தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!