கார்த்திகை தீப நாளில் சூரிய சக்தியில் எரியப் போகும் அகல் விளக்குகள்…!


கால மாற்றத்தில் விஞ்ஞானத்தின் தாக்கம் எல்லா விஷயங்களிலும் புகுந்து வரும் நிலையில் கார்த்திகை தீபம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. பாரம்பரிய விழாக்களில் கார்த்திகை தீப விழாவும் ஒன்று.

கார்த்திகை தீப நாளில் வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது காலம் காலமாக கடைபிடிக்கப்படும் வழக்கம். பூஜை அறை மட்டுமில்லாமல் வீட்டின் முன்பும் பல அகல் விளக்குகளை ஏற்றி வைத்திருப்பார்கள். வீடே ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும்.

அகல் விளக்கு ஏற்றுவதற்கு பின்பற்றுவதற்கான விதிமுறைகள் உள்ளன. அகல் விளக்குகளில் கெட்டியான புதிய திரி போட்டு விளக்குகள் நிறைய எண்ணை ஊற்ற வேண்டும். நெய் முதல் பலவகை எண்ணைகளும் பயன்படுத்தப்படும்.

இதில் எந்தெந்த எண்ணை ஊற்றி விளக்கேற்றினால் என்ன பலன் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே கார்த்திகை தீப நாளில் வீடுகளில் விளக்கேற்றுவது ஐதீகத்தோடு புனிதமான விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.

கால மாற்றத்தில் விஞ்ஞானத்தின் தாக்கம் எல்லா விஷயங்களிலும் புகுந்து வருவது தெரிந்ததே. எல்லாம் டிஜிட்டல் மயமாகி வருவதாக பெருமையுடன் சொல்கிறோம்.

அந்த வகையில் கார்த்திகை தீபமும் டிஜிட்டல் மயமாகி விட்டதோ என்று சொல்லும் அளவுக்கு அகல் விளக்கும் டிஜிட்டல் விளக்காக மாறி இருப்பதுதான் ஆச்சரியம். சூரிய ஒளி சக்தியால் எரியும் அகல் விளக்குகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்து மின் விளக்குகளை எரிய வைப்பது போல் இந்த அகல் விளக்குகளையும் எரிய விட்டுள்ளார்கள். மண்ணிளால் தயாரிக்கப்படும் அகல் விளக்குகளை போல் தயார் செய்து விளக்கின் மையப் பகுதியில் சூரிய ஒளி ஆற்றலை ஈர்த்து சேமித்து வைக்கும் சிறு தகடு பொருத்தப்பட்டுள்ளது.

பகலில் இந்த விளக்குகளை சூரிய வெளிச்சம் படும்படி வெளியில் வைக்க வேண்டும். அந்த நேரத்தில் சூரிய ஒளியில் இருந்து ஆற்றலை கிரகித்து வைத்து கொள்கிறது. மாலையில் இந்த விளக்குகளை எரிய விட்டால் ஓரிரு மணி நேரம் எரிகிறது.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியாக பார்க்கப்பட்டாலும் பாரம்பரிய வழக்கங்களில் மிகப்பெரிய அளவில் இதன் பயன்பாடு இல்லை. இதுபற்றி அகல் விளக்குகள் வாங்க வந்த பெண்களிடம் கேட்டபோது, ‘அலங்கார பொருளாக வேண்டுமானால் பயன்படுத்தலாம். பாரம்பரிய வழக்கத்தை கைவிடுவது சரியாக இருக்காது’ என்றனர்.

Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!