சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அதிரடி அபராதம் – ஏன் தெரியுமா..?


ஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

மென்பொருள் அப்டேட் மூலம் பழைய போன்களின் வேகம் வேண்டும் என்றே குறைக்கப்படுவதாக உலகம் முழுக்க குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இரு நிறுவனங்கள் மீது முதல் முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது முறையே 10 மற்றும் 5 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் நேர்மையற்ற வணிக முறைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது தெரியவந்துள்ளது.

இயங்குதள அப்டேட்கள் போனின் வேகத்தை குறைக்கச் செய்துள்ளன. சாம்சங் நிறுவனம் தனது நோட் 4 மாடலில் கூகுளின் புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளம் இன்ஸ்டால் செய்ய ரூ.8,199 கட்டணம் நிர்ணயம் செய்திருந்தது. இதேபோன்று ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 6 மாடலில் புதிய இயங்குதளம் இன்ஸ்டால் செய்ய ரூ.17,574, ஐபோன் 7 மாடலுக்கு ரூ.28,799 கட்டணம் நிர்ணயம் செய்தது.


ஐபோன்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் சார்ந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய தகவல்களை தெரிவிக்காமல் இருந்ததால், சாம்சங் நிறுவனத்தை விட அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஃபிரான்ஸ் நாட்டில் இதேபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொர்ந்து இத்தாலி ஒழுங்குமுறை ஆணையம் ஜனவரி மாதத்தில் நடவடிக்கையை துவங்கியது. பழைய ஐபோன் மாடல்களின் வேகத்தை வேண்டுமென்றே குறைத்ததை ஒப்புக் கொள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

அந்த சமயத்தில் ஆப்பிள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தது. மேலும் ஐபோனின் செயல்திறனை நீட்டிக்கவே போனின் வேகம் குறைக்கப்பட்டதாக ஆப்பிள் தெரிவித்தது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!