ஊருக்குள் தினமும் 5 வீடுகளில் சீரடி பாபா பெற்ற யாசகம்…!


பாபாவின் இந்த வாக்குறுதியை ஏற்று, தங்கள் வாழ்நாள் லட்சியத்தை கோடிக்கணக்கானவர்கள் எட்டியுள்ளனர். அவர்கள் அனைவரும் பாபாவை முழுமையாக நம்பினார்கள்.

அது மட்டுமல்ல, பாபாவை முழுமையாக அறிந்தும் இருந்தனர். நாமும் சாய்பாபா பற்றி உணர்ந்து கொள்ள வேண்டுமானால் முதலில் அவரது வாழ்வியல் நடைமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பாபாவின் ஒவ்வொரு செயலும், ஒரு தத்துவத்தை விளக்கும் ஆற்றல் கொண்டது. அதை பாபா பக்தர்கள் நுட்பமாக தெரிந்து கொண்டால் பாபாவை நோக்கி மேலும் ஒரு அடி முன்னேற முடியும். சாய்பாபா தினமும் அதிகாலையில் எழுந்து விடுவார். நள்ளிரவையும் கடந்து விழித்திருக்கும் அவர் அதிகாலையில் அனைவரும் எழுவதற்கு முன்பு எழுந்து பணிகளைத் தொடங்கி விடுவார்.
துவாரகமாயில் துனி எனும் அக்னிக்குண்டம் அருகில் அமர்ந்து தியானம் செய்வார். அப்போது அவர் வாய் ஏதேதோ முணுமுணுக்கும். அவர் என்ன உச்சரிக்கிறார் என்பதை யாராலும் தெரிந்து கொள்ள இயலாது.

அந்த சமயத்தில் பாபாவிடம் ஆசி பெற பக்தர்கள் குவிந்து விடுவார்கள். ஆனால் பாபா அருகில் பக்தர்கள் யாரையும் விட மாட்டார்கள். 50 அடி தூரத்திலேயே நிறுத்தி விடுவார்கள். தியானம் முடிந்த பிறகு சாய்பாபா பக்தர்களுடன் பேசுவார். சிலரிடம் சாய்பாபா பரிபாஷையில் ஏதாவது சொல்வார். பூடகமாகவும் அவர் பேசுவார். அவர் சொல்வது சில புரியும். பெரும்பாலானவை புரியாது.


அடுத்து வரும் ஓரிரு நாட்களில் அவர் சொன்ன மாதிரியே நடக்கும். அதன் பிறகே அவர் பரிபாஷையில் பேசியது புரிய வரும்.
அவரை காண வரும் பக்தர்கள் நிறைய உணவு வகைகளை கொண்டு வந்து அவர் காலடியில் வைப்பார்கள். ஆனால் எந்த ஒரு உணவையும் சாய்பாபா தொட மாட்டார்.

அவர் சமைத்தும் சாப்பிட மாட்டார். சமையல் செய்வது தொடர்பான எந்த ஒரு பொருளையும் அவர் தம்மோடு மசூதியில் வைத்திருக்கவில்லை. தினமும் அவர் சீரடி மக்களிடம் பிச்சை எடுத்தே சாப்பிட்டார். அதில் அவர் உறுதியாக இருந்தார். ஒருநாள் கூட அவர் மற்றவர் கள் சமைத்து எடுத்து வரும் உணவை சாப்பிட்டதில்லை. அந்த உணவுகளை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார்.

அது போல யார் வீட்டில் அமர்ந்தும் சாப்பிட மாட்டார். சீரடி மக்களில் எத்தனையோ பேர் அவருக்கு தினமும் அறுசுவை உணவு கொடுக்க தயாராக இருந்தனர்.ஆனால் சாய்பாபா அவற்றை ஏற்கவில்லை. பிச்சை எடுத்தே சாப்பிட்டார். தினமும் அவர் 2 தடவை பிச்சை எடுப்பார். சில நாள் 3 தடவையும் பிச்சை எடுத்தது உண்டு.

காலையில் பக்தர்களை சந்தித்து பேசிய பிறகு 7 மணிக்கு முதல் கட்ட பிச்சையை எடுக்க செல்வார். சாய்பாபா பிச்சை எடுக்கும் விதம் அலாதியானது. அவர் பிச்சை எடுக்க செல்லும் முன்பு ஒரு துணியை எடுத்து இரண்டாக மடித்து இடதுகையில் துணிப்பை போல தொங்கப் போட்டுக் கொள்வார். வலது கையில் ஒரு தகரக் குவளையை ஏந்திக் கொள்வார்.

சீரடியில் எத்தனையோ வீடுகள் இருந்த போதிலும் 5 பேர் வீடுகளுக்கு மட்டுமே அவர் செல்வார். அந்த பாக்கியம் பெற்றவர்கள் யார் – யார் தெரியுமா?


1. தத்யா பட்டீல் வீடு
2. வாமன சுக்காராம் வீடு
3. நந்து சவாய் ரமா வாணி வீடு
4. சாமா என்றழைக்கப்படும் மாதவ்ராவ் தேஷ்பாண்டே வீடு
5. அப்பாஜி பட்டீல் வீடு

இவர்கள் வீடு முன்பு வாசலில் நின்று கொண்டு, “தாயே எனக்கு ஒரு ரொட்டி கொடு” என்பார். பாபா வருகைக்காக அந்த 5 வீடுகளின் குடும்பத்தினர் காத்திருப்பார்கள். பாபாவுக்கு கொடுப்பதற்காகவே உணவு வகைகளை எடுத்து வைத்திருப்பார்கள். அவர்கள் கொடுக்கும் சாதம், ரொட்டி போன்றவற்றை தனது துணிப் பையில் வாங்கிக் கொள்வார். குழம்பு, ரசம் ஆகியவற்றை தகரக் குவளையில் பெற்றுக் கொள்வார்.

மசூதிக்கு திரும்பியதும் உணவுப் பொருட்கள் அனைத்தையும் ஒரு பானைக்குள் போடுவார். அனைத்தையும் ஒன்றாக்குவார். பக்தர்களுக்கும், விலங்குகளுக்கும் அந்த உணவை பகிர்ந்து கொடுப்பார். பாபா தரும் உணவை பெற்றுக் கொள்ள மசூதி முன்பு ஏராளமான விலங்குகள் காத்திருக்கும். மீதமாகும் உணவில் சிறிதை பாபா உண்பார். காலை உணவு முடிந்ததும் 9 மணியளவில் மசூதி பின்புறம் உள்ள லெண்டிபாக் எனும் தோட்டத்துக்கு பாபா உலாவப் போவார்.

பல வகை செடிகளை வைத்து பாபாவே உருவாக்கிய அந்த தோட்டத்துக்குள் அவர் ஒரு அணையா விளக்கு வைத்திருந்தார். அந்த நந்தா தீப விளக்கை பராமரிக்கும் பொறுப்பை அப்துல் என்பவரிடம் பாபா ஒப்படைத்திருந்தார். எனவே லெண்டிபாக் தோட்டத்துக்குள் அப்துல் தவிர வேறு யாரையும் நுழைய விட பாபா அனுமதித்ததே இல்லை. யார் தொந்தரவும் இல்லாமல் பாபா சுமார் 11.2 மணி நேரம் லெண்டிபாக் தோட்டத்துக்குள் இருப்பார்.

தோட்டத்தை ஒரு சுற்று சுற்றி வந்த பிறகு அணையா விளக்கு அருகில் பாபா அமர்வார். அந்த அணையா விளக்கு சுமார் 2 அடி ஆழமுள்ள குழியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த அணையா விளக்கு பகுதியை சுற்றிலும் திரைகள் கட்டப்பட்டிருக்கும். அணையா விளக்கு அருகில் உள்ள தூணில் பாபா அமர்ந்து கொண்டு தியானம் செய்வார்.


அப்போது பாபா அருகில் 2 வாளிகளில் தண்ணீர் எடுத்து வந்து அப்துல் வைப்பார். அந்த தண்ணீரை கையில் எடுத்து அணையா விளக்கு அருகில் பாபா தெளிப்பார். பிறகு எழுந்து நாலாபுறமும் நடந்து செல்வார். எல்லா திசைகளிலும் நின்றபடி அணையா விளக்கை உற்றுப் பார்ப்பார். எதற்காக அவர் அப்படி பார்ப்பார் என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் தினமும் இதை பாபா ஒரு நடைமுறையாக செய்தார். காலை 10 மணி வரை அவர் லெண்டிபாக் தோட்டத்தில்தான் இருப்பார்.
பிறகு பாபா மீண்டும் மசூதிக்கு திரும்பி வருவார். அங்கு பக்தர்களுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாடுவார். அப்போது பக்தர்கள் பஜனைப் பாடல்கள் பாடுவார்கள்.

பக்தர்களுக்கு ஆசி வழங்கி முடித்ததும் மீண்டும் பிச்சை எடுக்க சீரடி ஊருக்குள் செல்வார். பிச்சை எடுத்து வந்ததும் பானையில் போட்டு ஒன்றாக்குவார். மதியம் 12 மணிக்கு பாபாவுக்கு ஆரத்தி எடுக்கப்படும். அதன்பிறகு பக்தர்கள், விலங்குகளுக்கு உணவை பிரித்துக் கொடுப்பார். பிறகு உதியும் கொடுத்து ஆசீர்வதிப்பார்.

அதன்பின் பாபா மதிய உணவுக்கு நண்பர்கள் சிலருடன் அமர்வார். படேபாபா என்பவர்தான் எப்போதும் பாபா அருகில் அமர்ந்து சாப்பிடுவார். பாபாவின் இடது புறம் தத்யாபடீல், ராமச்சந்திர படீல், பையாகி படீல் ஆகியோர் உட்கார்ந்து இருப்பார்கள். பாபா வலது புறம் படேபாபா, மாதவராவ் தேஷ்பாடே, பூட்டி, காக்கா சாகேப் தீட்சிதர் ஆகியார் அமர்வார்கள். இப்படி பலர் புடைசூழ அமர்ந்தே பாபா மதிய உணவை சாப்பிடுவார்.

படே பாபா அருகில் இல்லாமல் பாபா சாப்பிட்டதே இல்லை. எல்லாரும் மதிய உணவு சாப்பிட தனி தனி தட்டுகள் வழங்கப்படும். ஆனால் சாய்பாபாவும் படே பாபாவும் ஒரே தட்டில் உணவு சாப்பிடுவார்கள். பின்னர் திரை போடப்படும். மதிய உணவு முடிந்ததும் மசூதி யில் யாரையும் தங்க அனுமதிக்க மாட்டார்கள். திரை போடப்பட்டு விட்டால் பிறகு யாரும் மசூதிக்குள் நுழைய மாட்டார்கள்.
இதனால் மதிய உணவுக்குப் பிறகு பாபா சிறிது நேரம் தனியாக இருப்பார். அந்த சமயத்தில் சாய்பாபா தியானம் செய்யக்கூடும் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.


ஆனால் தாங்கனு மகாராஜ் என்பவருக்கு பாபா மதிய உணவுக்குப் பிறகு என்ன செய்கிறார் என்பதை காணும் வாய்ப்பு ஒரு தடவை கிடைத்தது. பாபா இருந்த பகுதிக்குள் அவர் திடீரென நுழைந்து விட்டார். அப்போது பாபா 10 செப்புக் காசுகளை எடுத்து தன் விரல் நுனியால் இடைவிடாது தேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர், இது காக்கா காசு, இது நானா காசு என்று சொல்லியபடி இருந்தார்.
இதன் மூலம் பாபா மதிய உணவுக்குப் பிறகு தியானம் எதுவும் செய்வதில்லை என்று தெரிய வந்தது. அதற்கு பதில் காசை தன் கையில் தேய்த்து, அந்த காசுக்குரியவர்களின் தோஷங்களை நீக்கியதாக கூறப்படுகிறது.

பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை சாய்பாபா இப்படி தனிமையில் அமர்ந்து மற்றவர்களின் துயரத்தை அவர்கள் அறியாமலே தீர்த்து வைத்தார். பிற்பகல் 3 மணிக்கு பாபா மீண்டும் பக்தர்களை சந்தித்து ஆசி வழங்குவார்.

அதன்பிறகு ஹரிதாசர்கள், சர்க்கஸ்காரர்கள், மாறுவேடம் போடுபவர்கள் பகுதி முன்பு வருவார்கள். அவர்கள் தங்கள் கலைகளை பாபா முன்பு செய்து காட்டுவார்கள். அவர்கள் அனைவருக்கும் பாபா தலா 2 ரூபாய் சன்மானம் கொடுத்து அனுப்பி வைப்பார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் பாபா லெண்டிபாக் தோட்டத்துக்கு புறப்பட்டுச் செல்வார். அங்கு தோட்டத்துக்குள் உலாவியபடி இருப்பார்.

சுமார் 1 மணி நேரம் கழித்து மீண்டும் மசூதிக்கு வருவார். மசூதி வெளிப்புறச் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு அந்த வழியாக வருபவர்களிடம் பேசுவார். சிலரை பார்த்ததும் கோபத்தில் சத்தமிடுவார். சிலரிடம் சிரித்தப்படி ஆசி கூறுவார். பாபா ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பதற்கு ரகசிய காரணங்கள் இருக்கும்.


அப்படி அவர் மசூதி சுவரில் சாய்ந்து நின்று பேசிய இடத்தில் தற்போது அவருடைய பாதகைகள் பதிக்கப்பட்டுள்ளன. மாலையில் பக்தர்களுடன் உரையாடுவார். அவர்களுக்கு நிறைய கதைகள் சொல்வார். இரவு 8 மணிக்கு அவர் முன்பு அன்று வந்த காணிக்கை பொருட்கள், தட்சணை பணம் கொண்டு வந்து வைக்கப்படும். அந்த பணம், பொருட்கள் அனைத்தையும் பக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் சாய்பாபா பிரித்துக் கொடுத்து விடுவார். அவரிடம் பணம் பெறுவதற்காகவே நிறைய பேர் இரவு வரை துவாரகமாயியில் காத்திருப்பார்கள். ஒரு பைசா கூட மிச்சம் இல்லாமல் எல்லா பணத்தையும் அவர் பிரித்து கொடுத்து விடுவார்.

பணம் வினியோகம் முடிந்ததும் அனைவருக்கும் பாபா உதி கொடுத்து ஆசீர்வாதம் செய்து அனுப்பிவைப்பார். பாபாவின் தினசரி வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. பக்தர்கள் அவருக்கு ஆரத்தி எடுக்கும் பழக்கம் வந்த பிறகும் கூட அவர் தனது இந்த தினசரி வழக்கங்களை மாற்றிக் கொள்ளவில்லை.

பாபா தனது தினசரி பழக்க – வழக்கத்தில் தட்சணை வாங்குவதை மிகவும் கட்டாயமாக வைத்திருந்தார். பாபா பெற்ற அந்த தட்சணைகளில் ஒரு சூட்சமம் இருந்தது. அந்த ரகசியம் பற்றி அடுத்த வாரம் வியாழக்கிழமை காணலாம்.-Source: maalaimalar

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!