பேஸ்புக்கை தொடந்து கூகுள் செய்த திருட்டு வேலை அம்பலம்…!


உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கூகுள் தேடல் மட்டுமல்லாது, பல்வேறு வகையான வசதிகளையும் நிர்வகித்து வரும் கூகுள், தனது சமூக வலைதளமான கூகுள் ப்ளஸை மூடுவதாக நேற்று அறிவித்தது.

முன்னதாக கூகுள் பிளஸ் மூலம் அதன் பயனாளர்கள் பற்றிய தகவல்கள் திருடப்படுவதாக, அமெரிக்காவின் பிரபல ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் நேற்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் பிளஸ் சமூகவலைத்தளம் நிரந்தரமாக மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது.

500,000-க்கும் மேற்பட்ட கூகுள் பளஸ் தனிநபர் கணக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்துக்குப் போட்டியாக கூகுள் பிளஸ் வலைத்தளம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

கூகுள் ப்ளஸ் உருவாக்கம் மற்றும் பராமரித்தலில் குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதாலும், பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாத காரணம் மற்றும் மிகக் குறைவான பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


கடந்த மார்ச் மாதத்தில், பாதுகாப்பு தணிக்கைக்குழு வெளியிட்ட தகவல்படி, மென்பொருள் தொழில்நுட்ப பிழை காரணமாக, கூகுள் ப்ளஸ் பயனர்கள், அவர்களது நண்பர்களுடன் மட்டுமே பகிரும் தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், எந்தெந்த கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், 500,000-க்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

மேலும் இந்த அசம்பாவிதத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை, எந்த பயனர்களின் கணக்குகளிலும் அதற்கான சாட்சிகளும் இல்லை என்றும் கூகுள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இன்னும் 10 மாதங்களுக்குள் பயனர்ங்கள் தங்களது தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் வரை கூகுள் ப்ளஸ் கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முன்னதாக கடந்த ஆண்டு ஃபேஸ்புக் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்பட்டதாக வெளியான தகவல் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.- Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!