சந்திரனிற்கு முதன் முதலாக செல்லும் ஜப்பான் நாட்டு கோடீசுவரர்…!


பூமியில் இருந்து சுமார் 2 லட்சத்து 37 ஆயிரத்து 685 மைல் தொலைவில் நிலவு உள்ளது.

நிலவில் உள்ள இயற்கை வளங்களை ஆய்வு செய்ய அமெரிக்காவும், ரஷியாவும் போட்டி போட்டு மனிதர்களை அங்கு அனுப்பி தரை இறக்கி ஆய்வு செய்தது.

கடைசியாக 1972-ம் ஆண்டு அப்பல்லோ விண்கலம் மூலம் அமெரிக்கர் சென்ற பிறகு நிலவுக்கு யாரும் செல்லவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் என்ற நிறுவனம் நிலாவுக்கு கட்டண அடிப்படையில் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை தொடங்கி உள்ளது.

எலான்மஸ்க் என்ற கோடீஸ்வரர் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பணக்காரர்கள் நிலாவுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர்.

இதையடுத்து நிலாவுக்கு முதல் முதலாக பணம் கட்டி செல்லப்போகும் நபரை இன்று அறிவிப்பதாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கூறி இருந்தது.

அதன்படி இன்று காலை நிலாவுக்கு கட்டணம் செலுத்தி செல்லும் முதல் அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரிய வந்தது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் யுசாகு மேசாவா என்பவரே அந்த சிறப்பை பெற்றுள்ளார்.

42 வயதாகும் யுசாகு மேசாவா ஜப்பான் நாட்டின் 18-வது பணக்காரர் ஆவார். இவர் ஜப்பானில் காமாக்யா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர். மிக மிக கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்.


பிழைப்புக்காக அவரது பெற்றோர் ஜப்பானில் ஒவ்வொரு ஊராக சென்றதால் யுசாகு மேசாவால் பள்ளி படிப்பைக் கூட முடிக்க இயலவில்லை. சிறு வயதிலேயே கூலித்தொழிலுக்கு வந்து விட்ட அவர் பிறகு பிழைப்பை தேடி அமெரிக்கா சென்றார்.

அங்கு ஸ்கேட்கோர்ட் எனும் பயிற்சியில் ஈடுபட்டார். பிறகு ஒரு அமெரிக்க பெண்ணை காதலித்தார். அப்பெண்ணுடன் சுமார் 5 வருடங்கள் அமெரிக்காவில் குடும்பம் நடத்தினார்.

அந்த 5 ஆண்டுகளில் அவர் ஆயிரக்கணக்கான பழைய பாடல்கள் கொண்ட சி.டி.க்களை வாங்கி குவித்தார். 1996-ம் ஆண்டு ஜப்பானுக்கு திரும்பிய அவர் அந்த சி.டி.க்களை விற்பனை செய்யப்போவதாக அறிவித்தார். இதன் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் பணம் திரண்டது.

இதையடுத்த 1998-ம் ஆண்டு ஸ்டார்ட் டுடே என்ற இணைய தள நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம் உணவு பொருட்கள், ஆடைகளை விற்பனை செய்து வந்தார்.

2004-ம் ஆண்டு சோசோ டவுன் என்ற ஆன்லைன் நிறுவனத்தை யுசாகு மேசாவா தொடங்கினார். இந்த நிறுவனம் தற்போது ஜப்பானில் நம்பர்-ஒன் ஆன்லைன் நிறுவனமாக திகழ்கிறது.

இதன் மூலம் உலக பணக்காரர் வரிசையில் யுசாகு இடம் பிடித்துள்ளார். போபர்ஸ் பத்திரிகை அவரது நிறுவனத்தை உலகின் தலைசிறந்த நிறுவனமாக தேர்வு செய்து அறிவித்தது.

தற்போது நிலாவுக்கு பயணம் செய்யும் முதல் சுற்றுலா பயணி என்ற சிறப்பு மூலம் யுசாகு ஒரே நாளில் உலக புகழ் பெற்று விட்டார். நேற்று வரை அவரை பற்றி ஜப்பானில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்து இருந்தது. ஆனால் இன்று இணைய தளங்கள் மூலம் அவரது புகழ் உலகம் முழுக்க பரவி உள்ளது.

2023-ம் ஆண்டு அவர் நிலாவுக்கு சுற்றுலா செல்லுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 118 மீட்டர் உயரமுள்ள ராக்கெட் இதற்காக பிரத்யேக வடிவமைக்கப்பட்டுள்ளது. யுசாகு தன்னுடன் 8 பேரை தன் சொந்த செலவில் நிலாவுக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!