வெளியாகி 5 நிமிடத்தில் ரூ.200 கோடி அள்ளிய ஸ்மார்ட்போன்…!


முன்பதிவு துவங்கி ஐந்து நிமிடத்தில் ரூ.200 கோடி வரையில் அள்ளிய போகோ எப்-1 ஸ்மார்ட்போனில் எச்டி தரத்தில் வீடியோ பார்க்க முடியாது என்பதால் ஸ்மார்ட்போன் பிரியர்கள் குழம்பி போயுள்ளனர்.

எதைத் தொட்டாலும் ஹிட்டடிக்கும் ஷியோமியின் சமீபத்திய வரவு போகோ எப்1. ஒன் பிளஸ் 6-ல் இருக்கும் அதே வசதிகளை அதை விடப் பத்தாயிரம் ரூபாய் குறைவாகக் கொடுத்தால் கேட்கவா வேண்டும்? வழக்கம்போல ஒரு ஹிட்டை பார்சல் பண்ணியிருக்கிறது ஷியோமி.

ஆகஸ்ட் 29-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வந்த இந்த ஸ்மார்ட்போன் வெறும் ஐந்தே நிமிடங்களில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்ததாக ட்விட்டரில் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது போகோ எப்1.

இப்படி டாப் கியரில் போய்க்கொண்டிருந்த போகோவை ஒரு செய்தி குறுக்கே வந்து அதன் வேகத்தைக் குறைந்திருக்கிறது. அந்தச் செய்தி வெளியான பிறகு போகோ எப்1 ஸ்மார்ட்போனை கையில் வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி அதை வாங்கலாம் என நினைத்திருந்தவர்களும் குழம்பிப்போயிருக்கிறார்கள்.

போகோ எப்1 ஸ்மார்ட்போனில் என்ன பிரச்னை?

அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஆப்களில் எச்டி தரத்தில் வீடியோக்களைப் பார்க்க முடியவில்லை என்பதுதான் போகோ எப்1 ஸ்மார்ட்போன் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு. இந்தத் தகவல் வெளியானவுடன் அது போகோ-வைவிட வைரலாக இணையத்தில் பரவிக்கொண்டிருக்கிறது.

எச்டி தரத்தில் வீடியோக்களை பார்க்க முடியாததற்கு காரணம் அதில் டீஆர்எம் இல்லை என்பதுதான். கேமரா, டிசைன், புராஸசர் என பல விஷயங்களில் பார்த்து போகோ எப்1 ஸ்மார்ட்போனை உருவாக்கிய ஷியோமி ஒரு விஷயத்தில் கவனக்குறைவாக இருந்து விட்டது.


டீஆர்எம் (Digital rights management) எனப்படுவது ஒரு டிஜிட்டல் சாதனத்தில் இருக்கும் விஷயங்களின் காப்புரிமை மேலாண்மை தொடர்பாக பயன்படுத்தப்படுவது. டீர்எம் என்பது பல்வேறு டிஜிட்டல் சாதனங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதுதான்.

தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் பல டீஆர்எம்-களில் வைட்வைன் என்பதும் ஒன்று. ஸ்மார்ட்போனில் இருக்கும் டீஆர்எம் அதில் இருக்கும் மல்ட்டிமீடியா தொடர்பான காப்புரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

வைட்வைன் கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பதால் குரோம் வெப் பிரவுசரிலும், ஆண்ட்ராய்டு இயங்குதளங்களைப் பயன்படுத்தும் சாதனங்களிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

தவிர இந்தச் சேவையை கூகுள் இலவசமாகவே தருகிறது. அப்படி இருக்கும்போது எதனால் ஷியோமி நிறுவனம் போகோ எப்1 ஸ்மார்ட்போனில் இதைப் பயன்படுத்துவதற்கு மறந்தது என்பதுதான் தெரியவில்லை.

போகோ எப்1 ஸ்மார்ட்போனை வாங்கலாமா ? வாங்கக் கூடாதா ?

இந்தத் தகவலை கேள்விப்பட்டவுடன் அனைவருக்குமே இந்தக் கேள்வி தோன்றுவது இயல்புதான். வைட்வைனில் இருக்கும் இந்தச் சிக்கலால் ஸ்மார்ட்போனின் பெர்ஃபாமன்சில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது.

ஆனால் அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற சில தேர்ட் பார்ட்டி ஆப்களில் எச்டி தரத்தில் மட்டும் வீடியோக்கள் பார்ப்பதில் பிரச்னை வரக்கூடும். மற்றபடி ஸ்மார்ட்போனின் சேமித்து வைக்கப்பட்ட வீடியோக்களுக்கோ, யூடியூப் போன்றவற்றிக்கோ டிஆர்எம் அவசியமில்லை என்பதால், அவற்றில் எச்டி மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தில் வீடியோக்களைப் பார்க்க முடியும்.

அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்றவற்றை சாதாரண தரத்தில் பார்ப்பேன் என்பவர்கள் தாராளமாக போகோ எப்1-னை வாங்கலாம். ஆனால், இவற்றையெல்லாம் எச்டி தரத்தில் மட்டும் தான் பார்ப்பேன் என்பவர்கள் இந்தச் சிக்கலை ஷியோமி எப்படித் தீர்க்கப்போகிறது என்பதைப் பார்த்து விட்டு வாங்கலாம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!