மந்திரவாதி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தேன்… கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்…!


மாந்திரீகம் பலிக்காததால் மந்திரவாதியை கொன்றதாக கைதான பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கைதான அப்பெண் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சைய்யது பஸ்ருதீன் (63). மந்திரவாதியான இவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனது கட்டிடத்தில் குறி சொல்லும் தொழில் செய்து வந்தார்.

கடந்த 27-ந்தேதி இவர் குறி சொல்லி கொண்டிருந்த போது பர்தா அணிந்த பெண் ஒருவர் ஆசிட்டை அவர் மீது வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் முகம் கருகிய சைய்யது பஸ்ருதீன் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிட் வீசிய பெண் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அப்பெண் அடிக்கடி குறி கேட்க வரும் ஐஸ்அவுசை சேர்ந்த நபீன் தாஜ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை தேடினர். அப்போது அவர் கீழ்ப்பாக்கம் அரசு மனநலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசினார்.

இதையடுத்து அவர் உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா? அல்லது கொலை வழக்கில் இருந்து தப்பிக்க நாடகம் ஆடுகிறாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மனநல பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் அவருக்கு மனநிலை பாதிக்கப்படவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் அளித்த சான்றிதழை அடிப்படையாக வைத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

நபீன் தாஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது கணவர் மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப பிரச்சனைக்காகவும், தொழில் விருத்திக்காகவும் மந்திரவாதி சைய்யது பஸ்ரூதினை அடிக்கடி சந்தித்து வந்தேன். அப்போது பூஜை பொருட்கள் வாங்கி செல்வேன். ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கினார். தொடர்ந்து 13 வாரம் வருமாறு அவர் கூறினார்.

ஆனாலும் பிரச்சனை தீராததால் அவருடன் சண்டை போட்டேன். அதன் பின் மீண்டும் 13 வாரம் வருமாறு கூறினார். இது போல் கடந்த 2 ஆண்டுகளாக அவரை சந்தித்து வந்தேன். ஆனால் எனது பிரச்சனை எதுவுமே தீரவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்தேன்.

இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் மந்திரவாதி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தேன். பின்னர் அங்கிருந்து தப்பி உறவினர் வீட்டிற்கு சென்றேன். அப்போது எனக்கு மன உளைச்சல் இருப்பதாக கூறியதால் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபீன் தாஜ் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!