தங்கப்பதக்கம் வென்ற தஜிந்தர் – புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு அர்ப்பணிப்பு..!!


ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்தவர் தஜிந்தர் பால் சிங். குண்டு எறிதலில் அவர் தங்கம் வென்று முத்திரை பதித்தார்.

பஞ்சாப்பை சேர்ந்த தஜிந்தர்பால்சிங் 20.75 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஆசிய விளையாட்டு சாதனையுடன் முதலிடத்தை பிடித்தார்.

இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் சவுதி அரேபியாவை சேர்ந்த சுல்தான் அப்துல் மஜித் 20.57 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை அவர் 8 ஆண்டுகளுக்கு பிறகு முறியடித்தார்.

மேலும் தஜிந்தர் புதிய தேசிய சாதனையும் படைத்தார். 2012-ல் ஒம்பிரகாஷ் 20.69 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது.

23 வயதான தஜிந்தர்பால் சிங் தனது தங்கப் பதக்கத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தந்தைக்கு அர்ப்பணம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எனது தந்தை கரம்சிங் புற்றுநோயால் கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாலும் அவரது ஆதரவு எனக்கு அதிகமாக இருக்கிறது.

எனது தந்தையின் வாழ்க்கை எப்போதுமே தியாகம் நிறைந்தது. விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துமாறு எப்போதும் கூறுவார். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த தங்கப்பதக்கத்தை எனது தந்தைக்கு அர்ப்பணம் செய்கிறேன்.

இவ்வாறு தஜிந்தர்பால் கூறினார்.

தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவர் மனம் தளராமல் பேராடி தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!