ஒன்றரை கோடியை சுருட்டிக் கொண்டு தப்பி சென்ற தம்பதி தற்கொலை – நடந்தது என்ன..?


நாகர்கோவிலில் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்து தப்பி சென்ற தம்பதி நாக்பூர் ரெயில் நிலையத்தில் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டனர்.

போலீஸ் விசாரணையின் போது சயனைடு தின்று தற்கொலை செய்து பிணமாக கிடந்த ராஜ்குமார்-சிவசெல்வி.

நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம், 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது48).

ராஜ்குமாரின் மனைவி சிவசெல்வி. ஈரோடு மாவட்டம், பவானி, தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் வந்தனர்.

நாகர்கோவில் அருகே மருங்கூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர். அக்கம் பக்கத்தினருடனும் நெருங்கி பழகினர். அப்போது ராஜ்குமார் தனக்கு பல்வேறு தனியார் நிதி நிறுவன அதிகாரிகளுடன் பழக்கம் இருப்பதாகவும், அங்கு அடகு வைக்கப்படும் நகைகளை குறைந்த விலைக்கு தன்னால் வாங்கி தர முடியும் என்றும் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார்.

பழைய நகையை வாங்கி அதனை வேறு நபர்களுக்கு விற்றால் கூடுதல் பணம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பி ராஜ்குமார்- சிவசெல்வி தம்பதியிடம் அக்கம் பக்கத்தினர் சிலர் பணம் கொடுத்தனர்.

தொடக்கத்தில் சிலருக்கு நகைகளை ராஜ்குமார் குறைந்த விலைக்கு வாங்கி கொடுத்தார். இதனை நம்பி பலரும் அவரிடம் பணம் கொடுத்தனர். இதில் மருங்கூரைச் சேர்ந்த வாசன் (44) என்பவர் ரூ.12 லட்சத்து 95 ஆயிரம் கொடுத்தார்.

இந்த பணத்தை வாங்கிய பின்பு ராஜ்குமார் கூறியபடி வாசனுக்கு பழைய நகை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் இதற்காக வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை.

பணத்தை பல முறை கேட்டும் ராஜ்குமார் கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வாசன் அடிக்கடி ராஜ்குமார் வீட்டுக்குச் சென்று பணத்தை கேட்டு வந்தார்.

கடந்த வாரம் ராஜ்குமாரை தேடி வாசன் அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினரிடம் கேட்ட போது ராஜ்குமார் வீட்டை காலி செய்து விட்டு சென்றது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வாசன் இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் புகார் கொடுத்தார். அதில் தனக்கு பழைய நகை வாங்கி தருவதாக ஏமாற்றி ராஜ்குமார் ரூ.12 லட்சத்து 95 ஆயிரம் மோசடி செய்ததாகவும், அதனை மீட்டு தரும்படியும் கூறி இருந்தார்.


இந்த புகார் குறித்து விசாரித்த மாவட்ட குற்றப் பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவிட்டார். அவர்கள் ராஜ்குமார் பற்றி விசாரித்தனர். அப்போது அவர் வாசனிடம் ஏமாற்றியது போல் இன்னும் பலரிடம் ரூ.1 கோடியே 61 லட்சத்து 53 ஆயிரம் பணம் மோசடி செய்திருப்பதை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் ராஜ்குமார்- சிவசெல்வி தம்பதி மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவர்களை தேடினர். மேலும் ராஜ்குமார் செல்போன் நம்பர் மூலம் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதையும் தேடினர்.

செல்போன் டவர் மூலம் அவர்கள் இருக்கும் பகுதியை தேடிய போது அது மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியை காட்டியது.

இதை அறிந்த குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராஜ்குமார்-சிவசெல்வி தம்பதியின் புகைப்படத்தை நாக்பூர் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். அந்த படத்தில் இருக்கும் நபர்கள் ரெயில் நிலையத்தில் இருப்பதை கண்டு பிடித்தால் உடனே அவர்களை பிடித்து தகவல் தரும்படி கூறினர்.

நாக்பூர் ரெயில்வே போலீசார், ராஜ்குமார்-சிவசெல்வி தம்பதியின் புகைப்படத்தை வைத்து ரெயில் நிலையத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் அவர்கள் இருவரும் ஒரு ரெயிலில் இருந்து இறங்க முயன்றனர். அவர்களை நாக்பூர் ரெயில்வே போலீசார் மடக்கி பிடித்தனர்.

ராஜ்குமார்- சிவசெல்வி தம்பதி பிடிபட்ட தகவல் குமரி மாவட்ட குற்றப் பிரிவு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ராஜ்குமார்- சிவசெல்வி தம்பதியின் உடைமைகளை சோதனை செய்து அவர்களை போலீஸ் காவலில் வைக்கும்படியும் குமரி போலீசார் அங்கு வந்து அவர்களை கைது செய்வார்கள் என்றும் தெரிவித்தனர்.

ராஜ்குமார் – சிவசெல்வி தம்பதியின் உடைமைகளை சோதித்த போது அதில் அவர்கள் மோசடி செய்த பணம் முழுவதும் இருந்தது தெரிய வந்தது.

மோசடி பணத்துடன் சிக்கிக் கொண்ட ராஜ்குமார்-சிவசெல்வி தம்பதி போலீஸ் பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்றனர். ஆனால் நாக்பூர் போலீசார் அவர்களை தப்ப விடாமல் மடக்கியதால் இருவரும் கையில் இருந்த பொருள் ஒன்றை அவசரமாக தின்றனர்.

அதை உண்டதும் இருவரும் மயங்கி விழுந்தனர். உடனே போலீசார் அவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ராஜ்குமார்-சிவசெல்வி தம்பதி சயனைடு தின்று தற்கொலை செய்ததாக தெரிவித்தனர். இந்த தகவலும் குமரி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குமரி போலீசார் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் நாக்பூர் விரைந்தனர். அங்கு ராஜ்குமார்-சிவசெல்வி தம்பதியின் பிணத்தை கைப்பற்றி நாகர்கோவில் கொண்டு வர உள்ளனர். அதன் பிறகே இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!