நடிர் கமல்ஹாசன், பூஜாகுமார் நடித்த விஸ்வரூபம் 2 திரைவிமர்சனம்


நடிகர் கமல்ஹாசன்
நடிகை பூஜா குமார்
இயக்குனர் கமலஹாசன்
இசை ஜிப்ரான்
ஓளிப்பதிவு சனு ஜான் வர்கீஸ், சம்தத் சய்னதீன்
இந்திய ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கமல்ஹாசனிடம் பயிற்சி பெறுகிறார் ஆண்ட்ரியா. இராணுவ பகுதியை விட்டு வெளியே சென்ற குற்றத்திற்காக கமல்ஹாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் இருந்து தப்பிக்கும் கமல்ஹாசன், ரகசியமாக தனது வேலைகளில் ஈடுபடுகிறார். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கச் செல்கிறார்.

பின்னர், அமெரிக்காவில் டர்ட்டி பாமை செயழிலக்கச் செய்ய செல்லும் கமல், பூஜா குமாரை திருமணம் செய்து கொள்கிறார். அவளது உதவியுடன் டர்ட்டி பாமை செயழிலக்கச் செய்கிறார். முதலில் கமல் மீது அதீத அன்பு இல்லாமல் இருக்கும் பூஜா குமார், கமல் பாமை செயழிலக்கச் செய்யவே தன்னை திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிந்து வருத்தப்படுகிறார். இருப்பினும் உள்ளுக்குள் கமலை காதலிக்கிறார்.

இதற்கிடையே கமல் தனது குழுவினருடன் இந்தியா மற்றும் லண்டனில் வைக்கப்பட்டுள்ள மற்ற இரண்டு டர்ட்டி பாம்களை செயழிலக்கச் செய்யும் முயற்சியில் இறங்க, அல்கொய்தா தலைவனான உமர், கமல்ஹாசனை கொல்வதற்காக தேடி வருகிறார்.


கடைசியில், கமல் டர்ட்டி பாம்களை செயழிலக்கச் செய்தாரா? உமரை கொன்றாரா? அவரது முந்தைய வாழ்க்கையில் நடந்தது என்ன? அம்மாவுடனான சந்திப்பு, அதன் பின்னணியில் நடப்பது படத்தின் மீதிக்கதை.

கமல்ஹாசன் ஒரு நடிகராக தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கிறார். தனது ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு நுணுக்கம் உண்டு என்பதற்கு ஏற்ப, அவரது நடிப்பே படத்தின் கதையை ஓட்டிச் செல்கிறது. முதல் பாகத்தை விட, இந்த பாகத்தில் பூஜா குமார் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். காதல், கவர்ச்சி என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ராணுவத்தில் பணிபுரியும் ஆண்ட்ரியா அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். குறிப்பாக ஸ்டன்ட் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.

முதல் பாகத்தில் தனது அமைதியான வில்லத்தனத்தால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ராகுல் போஸ், இந்த பாகத்திலும் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். மற்றபடி சேகர் கபூர், ராகுல் போஸ், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவரவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக பூர்த்தி செய்திருக்கின்றனர்.


கமல்ஹாசன் ஒரு இயக்குநராக வழக்கமான அவரது பாணியை பின்பற்றியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சி, நீட்சி என அடுத்தடுத்த காட்சிகள் வேகமாக நகர்வது சற்றே குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. வசனங்கள், பேச்சில் ஆங்காங்கே அரசியல் வசனத்தையும் நுழைத்திருக்கிறார். நியூயார்க்கில் வாழும் கதக் நடனக் கலைஞர், இந்தியாவின் ரகசிய உளவாளி, அல்கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சியாளர், என பல்வேறு கதாபாத்திரங்களுடன் முதல் பாகத்தில் கலக்கிய கமல்ஹாசனின் அடுத்த ரூபங்கள் என்னென்ன என்பதையே விஸ்வரூபம் 2 படமாக உருவாக்கி இருக்கிறார்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சனு ஜான் வர்கீஸ், சம்தத் சய்னதீன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

மொத்தத்தில் `விஸ்வரூபம் 2′ ரூபங்கள் குறைவு.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!