ராஜாஜி ஹால் பகுதியில் தொண்டர்களால் இத்தனை டன் குப்பை சேர்ந்ததா..?


தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹால் பகுதியில் தொண்டர்கள் செருப்பு உள்பட 8 டன் குப்பை அகற்றப்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. லட்சக்கணக்கானவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

கருணாநிதியின் உடல் அடக்கம் இரவு 7 மணிக்கு முடிந்தாலும் தொண்டர்கள் கலைந்து செல்ல நேரம் நீடித்தது.

அதன் பின் மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

துணை கமி‌ஷனர் பிரியதர்ஷினி மேற்பார்வையில் மண்டல அதிகாரி வீரப்பன் தலைமையில் 150 ஊழியர்கள் துப்புரவு பணியினை மேற்கொண்டனர்.

ராஜாஜி அரங்கத்தை சுற்றிலும் செருப்புகள் சிதறி கிடந்தன. நெரிசலில் சிக்கிய தொண்டர்கள் தங்கள் கால்களில் அணிந்து வந்த செருப்பினை எடுக்க முடியாமல் விட்டுச் சென்றனர். செருப்புகள் மட்டுமே ஒரு டன் அளவில் குவிந்து உள்ளது. தண்ணீர் பாட்டில்கள், உணவு கழிவுகள், டம்ளர் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் மலைபோல் குவிந்தன. அவற்றை சுத்தம் செய்வதற்கு பெரும்பாடாகி விட்டது.

ராஜாஜி ஹால் அருகில் 8 டன் குப்பைகளையும், அண்ணா சாலை, வாலாஜா ரோடு, காமராஜர் சாலை வரையில் 10 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளன. இந்த பணியில் 60 ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மாலையில் தொடங்கிய துப்புரவு பணி அதிகாலை 4.30 மணிவரை நீடித்தது. மொத்தம் 18 டன் குப்பை அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.- Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!