தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்… ராஜாஜி அரங்கில் பரபரப்பு..!


கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி அரங்கில் திரண்ட தொண்டர்களால் கடும் நெரிசல் ஏற்பட்டதையடுத்து அவர்களை கலைந்துசெல்லும்படி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டுள்ளனர். நேரம் செல்லச்செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில இடங்களில் நெரிசலும் ஏற்பட்டது. சிலர் படிக்கட்டு வழியாக ஏறி, கருணாநிதி உடலைப் பார்க்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீஸ் லேசான தடியடியும் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது.

கூட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிக்கி 26 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து தொண்டர் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு வந்ததால், அவர்களை கட்டுப்படுத்தி இறுதி ஊர்வலத்தை அமைதியாக நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, மு.க.ஸ்டாலின் உடனடியாக தொண்டர்களிடையே மைக்கில் பேசினார். கருணாநிதியின் மறைவு, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பட்ட தடைகள் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசிய அவர், அமைதியாக கலைந்துசெல்லும்படி கூறினார்.

“கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கும்படி முதல்வரை சந்தித்து கேட்டபோது, தர முடியாது என்று மறுத்தார்கள். இதையடுது கலைஞரை நல்லடக்கம் செய்வதற்கான இடத்தை போராடி பெற்றுள்ளோம். கூட்ட நெரிசலை பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம். எனவே, கலவரம் ஏற்பட இடம் தராமல் அனைவரும் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும். அமைதியாக கலைந்து சென்றால்தான் சரியாக 4 மணிக்கு தலைவருடைய இறுதிப்பயணத்தை தொடங்க முடியும்.

உங்கள் சகோதரனாக கேட்கிறேன் தயவு செய்து கலைந்துசெல்லுங்கள். தயவு செய்து யாரும் சுவர் மற்றும் படிக்கட்டு வழியாக ஏறி வந்து கலைஞரின் முகத்தை பார்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். என் வார்த்தையை நீங்கள் கேட்பீர்கள் என நம்புகிறேன்” என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அவரது அன்புக் கட்டளையை ஏற்றுக்கொண்ட தொண்டர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்துசெல்லத் தொடங்கினர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!