உயிரை பறிக்கும் கிகி சேலஞ்ச்.. ஓடும் காரில் இருந்து இறங்கி ஆட்டம் போடும் நடிகைகள்..!


ஓடும் காரில் இருந்து இறங்கி, நடனமாடும் கிகி டான்ஸ் உயிருக்கே ஆபத்தானது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூகவலைதளங்களின் ஆதிக்கத்தால், சேலஞ்ச் என்ற பெயரில் பல விஷயங்கள் பிரபலமாகி வருகின்றன.

போக் மேன் கோ, ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என நடைபெற்ற சேலஞ்சுகள் தற்போது கிகி டான்ஸ் சேலஞ்சாக உருமாற்றம் பெற்றுள்ளது.இணையத்தளத்தில் முதன் முதலில் பெரிய அளவில் பிரலமடைந்தது ‘ஐஸ் பக்கெட்’சேலஞ்ச்.

இதனை உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள், பிரபலங்கள், வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் முயற்சித்தனர். அப்போது முதல் இன்று வரை பல விஷயங்களை சேலஞ்ச் எனக் கூறி, அதை அடுத்தவர்களுக்கும் சவால்விடுக்கின்றனர். ஒரு சில சேலஞ்சுகள் சிறப்பானதாக இருந்தாலும் பல சேலஞ்சுகள் கிறுக்குத்தனமாகவே உள்ளன. பல சேலஞ்சுகள் உயிரையே பறித்து விடுகின்றன.

சில நாட்களுக்கு முன்பு ஃபிட்னஸ் சேலஞ்ச் என்று ஒன்று அதிக அளவில் டிரெண்டானது. இதனை பிரதமர் மோடியும் செய்துவீடியோ வெளியிட்டதை நாம் அனைவரும் பார்த்தோம். அதை மீம் கிரியேட்டர்கள் விட்டுவைக்காமல், ஒரு வாரத்துக்கும்மேலாக தங்களது கற்பனைக் குதிரைகளை தட்டிவிட்டு, ஆதரித்தும், கேலியும் செய்தனர். இந்த வரிசையில் கனடாவைச் சேர்ந்த ராப் பாடகர் ஒருவர் பாடிய கிகி டூ யூ லவ் மீ பாடல் இணையத்தில் மிகப்பெரியசேலஞ்சாக உருவெடுத்துள்ளது.


ஆபத்துகள் நிறைந்த விளையாட்டுகள் விபரீதத்தில் முடியும் என்பதற்கு மற்றொருஉதாரணமாக இருக்கிறது கிகி சேலஞ்ச். ராப் பாடகர் பாடிய பாடலுக்கு ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடிவிட்டு மீண்டும்அதே காரில் ஏறி உட்கார வேண்டும். இது தான் கிகி சேலஞ்ச்.

இதை செய்த வெளிநாட்டினர் பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததுடன், பலர் படுகாயமும் அடைந்துள்ளனர். இதனை வெளிநாடு மட்டுமின்றி, இந்தியாவிலும் பலர் செய்து வருகின்றனர். நேற்று டெல்லியில் ஒரு காவலரே சாலையின் நடுவே காரை நிறுத்திவிட்டு நடனமாடிய நிலையில், தமிழ் சினிமா நடிகை ரெஜினாவும் இதுபோல் நடனமாடி , சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டார்.

ஆனால், இது மிகவும் ஆபத்தானது என்று ராஜஸ்தான் காவல்துறையினர் வீடியோ ஆதாரத்துடன் எச்சரித்துள்ளது. குடிபோதையில் வண்டி ஓட்டுவது எவ்வளவு ஆபத்தோ அது போலவே நடுசாலையில் ஓடும் வண்டியில் இருந்து இறங்கி கிகிசேலஞ்ச் செய்வதும் ஆபத்து என்று கூறியுள்ளனர். இதனால், இதுபோன்ற சேலஞ்சுகளை விடுத்துவிட்டு, ஆரோக்கியமான பல விசயங்களை செய்யலாம் என்றும், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் மீது கவனம் வைக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!