கிணத்தைக் காணோம் பாணியில்.. ‘எங்கள் மேகத்தை இஸ்ரேல் திருடுகிறது’ – ஈரான் குற்றச்சாட்டால் பரபரப்பு!


நடிகர் வடிவேலு, ‘கண்ணும் கண்ணும்’ படத்தில், “அய்யா, கிணத்தைக் காணோம்.. வட்டக் கிணறுய்யா” என்று சொல்லி போலீசில் புகார் செய்த காட்சியை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.

இதே போன்ற ஒரு புகாரை ஈரான் நாட்டின் ராணுவ தளபதி குலாம் ரேசா ஜலாலி, இஸ்ரேல் மீது சுமத்தி உள்ளார்.

இதுபற்றி அவர் நிருபர்களிடம் பேசுகையில், “ஈரான் நாட்டின் வானிலை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதில் வெளிநாட்டின் தொடர்பு சந்தேகிக்கப்படுகிறது. இஸ்ரேலும், இன்னொரு நாடும் கூட்டுச்சதி செய்து, ஈரானில் மழை பெய்யக் கூடாது என்பதற்காக மேகத்தை தடுத்து விடுகின்றன” என்று கூறினார். மேலும், “அதில் உச்சம் என்னவென்றால், எங்கள் மேகமும், பனியும் திருடுபோவதுதான்” என்றார்.

2 ஆயிரத்து 200 மீட்டர் உயரத்துக்கு மேல், ஆப்கானிஸ்தானுக்கும், மத்தியதரைக்கடல் பகுதிக்கும் இடையே ஈரானை தவிர பிற அனைத்து பகுதிகளும் பனியால் மூடப்பட்டு உள்ளன என்ற ஆய்வுத் தகவலையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தங்கள் நாட்டின் மேகத்தையும், பனியையும் இஸ்ரேல் திருடுவதாக ஈரான் ராணுவ தளபதி கூறி உள்ள குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!