உலகின் மிக மூத்த கத்தோலிக்க மத குருவுக்கு இப்படியொரு நிலமையா..?


ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் கத்தோலிக்க பேராயராக பணியாற்றி வருபவர் பிலிப் வில்சன் (வயது 67).

இவர் அங்கு நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் 1970-களில் துணை பாதிரியாராக இருந்தார். அப்போது ஜேம்ஸ் பிளெட்சர் என்ற பாதிரியார், தேவாலய சிறுவர்களை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்தி உள்ளார். ஆனால் இது குறித்து பிலிப் வில்சனுக்கு தெரிய வந்தபோது, அவர் ஜேம்ஸ் பிளெட்சர் மீது போலீசில் புகார் செய்யாமல், அந்த குற்ற சம்பவத்தை மறைக்கிற விதமாக புகார் கூறிய சிறுவர்களை தேவாலய சேவையில் இருந்து நீக்கினார்.

பின்னர் இந்த விவகாரம், அம்பலத்துக்கு வந்தது. ஜேம்ஸ் பிளெட்சர் மீது வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு 2004-ம் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நிலையில், அவர் சிறையிலேயே மரணம் அடைந்தார்.

அவரது குற்றத்தை மூடி மறைத்ததாக பிலிப் வில்சன் மீது அங்கு உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் விசாரணையின்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

இருப்பினும் ஜேம்ஸ் பிளெட்சரால் பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்தப்பட்ட பீட்டர் கிரெய்க் என்பவர், சம்பவம் நடந்து 5 ஆண்டுகளுக்கு பின்னர், அதுபற்றி பிலிப் வில்சனிடம் தான் விளக்கமாக தெரிவித்தாக கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். ஆனால் அதுபற்றி தனக்கு நினைவில் இல்லை என்று பிலிப் வில்சன் கூறினார். அதை கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது.

முடிவில் ஜேம்ஸ் பிளெட்சரின் பாலியல் குற்றத்தை பிலிப் வில்சன் மறைத்து விட்ட விஷயத்தில் குற்றவாளி என அறிவித்து, 1 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு ராபர்ட் ஸ்டோன் நேற்று தீர்ப்பு அளித்தார். அதே நேரத்தில் அவர் சிறைக்கு செல்வதை தவிர்க்கிற வகையில், வீட்டுச்சிறையில் வைக்கவும் வாய்ப்பு உள்ளதாக மாஜிஸ்திரேட்டு கூறினார். 6 மாதங்களுக்கு பிறகுதான் அவர் பரோலில் செல்ல முடியும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சிறுவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளான குற்றத்தை மறைத்த வழக்கு ஒன்றில், தண்டிக்கப்பட்ட உலகின் மிக மூத்த கத்தோலிக்க மத குரு என்ற அவப்பெயர் பிலிப் வில்சனுக்கு கிடைத்து உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!