இலட்சம் வருடமே ஆனாலும் தமிழ் நாகரிகம் அழிந்து விடாத சான்றுகள்…!


ஆயிரம் வருசத்துக்கு முன்னாடியே கட்டிடக் கலையை கற்பித்த கோயில் ஒரு வீடு கட்ட முடிவு செய்து விட்டால், உடனே அதற்கென இருக்கும் பொறியாளரைச் சந்தித்து, நாம் கட்ட வேண்டிய வீட்டின் அளவு, அறைகள் உட்பட அனைத்தையும் அவர் கொடுக்கும் வரைபடத்துடன் தான் பட்ஜெட் போடுகிறோம் நாம்.

ஆனால், பொறியியல் படிப்போ, அதற்கென தனிக் கல்லூரிகளோ இல்லாத அந்தக் காலத்தில் மக்கள் கலை நயத்துடன், உறுதியான கட்டிடங்களை எப்படிக் கட்டினார்கள் என்று யோசிக்கத் தோன்றுகிறது அல்லவா?


தற்காலப் படிப்பை விட, கட்டிடக் கலையின் நுணுக்கங்களை மிகத் துல்லியாக அளவு மாறாமல் செய்யப் பழகிய விதம் அவர்களது அனுபவப் பாடமும், அதற்கான கலைக் கல்வி ஆர்வமும் தான்.

மதுரையில் நிலங்களை அளப்பதற்கும், வீடு கட்டும் போது, செய்ய வேண்டிய துல்லியமான நில அளவைகள், அவற்றின் நுணுக்கங்கள் போன்ற விபரங்களை பொது மக்களுக்காக, பழங்காலத்தில் கோயில் வளாகத்தில் கல்வெட்டுக்களாகப் பொறித்து வைத்தார்கள்.


அது தான் மதுரைக்கு மேற்கே சோழவந்தானுக்குத் தெற்குப் பகுதியில் உள்ள தென்கரை மூலநாத சுவாமி கோயில். இந்தக் கோயிலில் உள்ள தூண்களிலும், கருவரையின் வெளிப்புறச் சுவர்களிலும், அளவைக் குறியீடுகளுடன் கூடிய கல்வெட்டுக்கள் உள்ளன.

இவற்றின் உதவியால் தான் அந்தக் காலத்தில் மக்கள் தங்களது நிலங்களை அளக்கவும், வீடுகளைக் கட்டும் விதங்களையும் தெரிந்து கொண்டார்கள். இந்த மூலநாத சுவாமி ஆலயம் என்ற சிவன் கோயில் கி.பி.10-ம் நூற்றாண்டில், சோழன் தலை கொண்ட வீர பாண்டிய மன்னனின் ஆட்சிக் காலத்தில் கட்டப் பட்டது. சிறிது காலத்தில் இயற்கையின் மாற்றத்தால் கோயில் சிதிலமடைந்தது.


ஆனாலும், இந்தக் கோயிலின் அடித்தளம் மட்டும் அப்படியே இருந்தது. அந்த அடித்தளத்தை வைத்துக் கொண்டு, அந்தக் கோயிலின் தூண்களையும், அத்துடன் இதைப் போலவே சிதைந்து போயிருந்த வீரசேகர விண்ணகரம் என்ற பெருமாள் கோயிலின் தூண்களையும் சேர்த்து, கி.பி.11-ஆம் நூற்றாண்டில், பராக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோயில் மீண்டும் புனரமைக்கப் பட்டது.

இதனை இக் கோயிலின் முக மண்டபத்தில் உள்ள தூண்களின் அளவு வித்தியாசங்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்தத் தூணிலேயே இதனைச் செதுக்கிய பாணியைப் பற்றியும், அக்கால கட்டிடக் கலைச் சிறப்பைத் தெரிந்து கொள்ளலாம்.


அந்தக் காலத்தில் மக்கள், தங்கள் நிலத்தை அளக்க வேண்டும் என்றாலும், நிலத்தைப் பாகம் போட்டுப் பிரிப்பதென்றாலும், புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று எண்ணினாலும், இந்தக் கோயிலுக்கு வந்தார்கள்.

இங்குள்ள கல்வெட்டுக்களைப் படித்து, அதனைப் பின்பற்றி, தங்கள் நிலங்களை சரியான அளவையில் அளந்து பிரித்துக் கொண்டார்கள். தாங்கள் நினைத்தது போலவே வீடுகளையும் கட்டிக் கொண்டார்கள்.


கோயில் கருவரையைச் சுற்றியுள்ள வெளிப்புறச் சுவர்களில், கூட்டல், கழித்தல் குறியீடுகளுடன் கூடிய நில அளவை முறைகளைப் பற்றிக் கல்வெட்டுச் செய்தியாகப் பொறிக்கப் பட்டுள்ளதையும் கண் கூடாகக் காண முடிகிறது. பாண்டிய நாட்டுக் கோயில்களில், ஆரம்பத்தில் தேவ கோட்டங்களில் தெய்வ சிலைகளை வைக்கும் மரபு இருந்தது இல்லை.

ஆனால், பாண்டிய நாட்டில் 11-ம் நூற்றாண்டு கால கட்டத்தில், பாண்டிய நாடு சோழர்களின் வசம் இருந்தது. இதனால், சோழ நாட்டின் மரபினைப் பின்பற்றி, இந்த மூலநாத சுவாமி ஆலயத்தில் தேவ கோட்டங்களில் தெய்வங்களின் உருவங்களை வைக்கும் மரபு பின்பற்றப் பட்டிருக்கிறது. நில அளவைக்கும், கட்டிடத்திற்கும் அடிப்படையான கருத்துக்களைக் கொண்டுள்ள இந்த வித்தியாசமான சிவாலயம், பழமையான வாசகசாலையாகச் செயல்பட்ட சிறந்ததொரு கலைக் கோயில் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!