பிளிப்கார்ட் ,அமேசானுக்கு போட்டியாக சந்தையில் களமிறங்கும் புதிய நிறுவனம்…!


பிளிப்கார்ட்,அமேசான் போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள் உலகின் 70 சதவீத மார்கெட்டைப் பிடித்து பலமாக வேரூன்றியுள்ள நிலையில், அதனை அசைத்துப் பார்க்கும் வகையில் இணையதளம் மூலம் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலில் இறங்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தை பலப்படுத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த பிளிப் கார்ட், ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்களுக்கு அமேசான் கடும் சவாலாக இருக்கிறது. மேலும் இந்திய ஆன்லைன் வர்த்தகத்தை வளைத்துபோட திட்டமிட்ட அமேசான் நிறுவனம் பிளிப் கார்ட்டை வாங்க நடவடிக்கை எடுத்தது.

ஆனால் இதை அறிந்த அமேசானின் போட்டி நிறுவனமான, அமெரிக்காவின் வால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 77 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதையடுத்து பிளிப்கார்ட் – அமேசான் நிறுவனங்கள் இடையே இணையதளம் மூலம் பொருட்கள் விற்பனை செய்வதில் கடும் போட்டி நிலவுகிறது. மளிகைப் பொருட்கள் முதல் கொண்டு அனைத்து வகைப் பொருட்களையும் இந்த நிறுவனங்கள் மார்க்கெட் செய்து வருகின்றன.


இந்நிலையில் இந்தியாவில் புதிதாக இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் இணையதளம் ஒன்றை உருவாக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங்கில் பெரும்பாலான வாடிக்கையாளர்களைபிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் கவர்ந்துள்ள நிலையில், அவற்றுக்குப் போட்டியாக புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்க கூகுள் நிறுவனம் ஆலோசித்து வருகிறது.

கூகுள் நிறுவனத்தின் இந்த இணையதளம் அந்நிறுவனத்தின் புராடெக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவு துணைத்தலைவர் சீசர் செங்குப்தா தலைமையில் தொடங்கும் என்று தெரிகிறது. 2018ஆம் ஆண்டு இறுதிக்குள் இதனை அறிமுகம் செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் கூகுள் நிறுவனம் சீனாவைச் சேர்ந்த ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான JD.com ல் 550 மில்லியன் டாலரை முதலீடு செய்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் புதிய ஆன்லைன் ஷாப்பிங்கைத் தொடங்குவது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சபாஷ் சரியான போட்டி.-Source:tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!