பெற்ற மகனை துடிதுடிக்க கழுத்து அறுத்து கொன்ற தந்தை… அதிர வைத்த காரணம்..!


திருவொற்றியூர் விம்கோ நகரில் தனியார் பள்ளிக்கூடத்தின் பின்புறம் உள்ள மழைநீர் கால்வாயில் கடந்த 10-ந் தேதி 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை செய்யப்பட்டவர் உடலை ஸ்டான்லி மருத்துவமனையில் வைத்திருந்தனர். பிணமாக கிடந்த வாலிபர் யார்? என்பதை அறிவதற்காக அவரது புகைப்படத்தை சென்னையின் பல இடங்களில் போலீசார் ஒட்டி இருந்தனர்.

இதனைப்பார்த்த பெண் ஒருவர் புகைப்படத்தில் இருக்கும் வாலிபர் திருவொற்றியூர் அம்பேத்கர் நகர் 2-வது தெருவில் வசித்துவரும் நவாசூதின் என்பவரது மகன் முகம்மது உசேன்(22) என்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் நவாசூதினிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அப்போது மனநிலை பாதிக்கப்பட்ட மகன் முகம்மது உசேனை அவரே கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நவாசூதினை கைது செய்தனர்.

நவாசூதின் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் சம்சா வியாபாரம் செய்து வருகிறேன். எனது மனைவி ரெஜினா. எனது மகன் முகம்மது உசேன் பிறந்தது முதல் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தான்.

வளர வளர அவனது சேட்டைகள் அதிகமானது. என்னால் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை. வாழ வேண்டிய வயதில் இப்படி மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளானே? என்ற மனவேதனை என்னை வாட்டி வதைத்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி மனைவி ரெஜினா ஆம்பூருக்கு சென்று விட்டார். வீட்டில் நானும் முகம்மது உசேன் மட்டும் இருந்தோம் அப்போது அவன் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினான். இதனால் அவன் மீது கோபம் ஏற்பட்டது. நமக்கு பிறகு மகனை யார் பார்ப்பார்கள்? மனநிலை பாதித்து கஷ்டப்படுவதை விட அவனை கொன்று விடலாம் என்று முடிவு செய்தேன்.

இதனையடுத்து அதிகாலை 2 மணியளவில் முகம்மது உசேனை பள்ளியின் பின்புறம் உள்ள கால்வாய் அருகே அழைத்து சென்றேன். அங்கு நான் வைத்திருந்த இறைச்சி வெட்ட பயன்படும் கத்தியால் அவனது கழுத்தை அறுத்தேன். சிறிதுநேரத்தில் அவன் துடிதுடித்து இறந்தான். பின்பு வீட்டிற்கு வந்து எதுவும் தெரியாதது போல் இருந்து விட்டேன்.

முகம்மது உசேன் எங்கே? என அக்கம்பக்கத்தினரும், மனைவியும் கேட்டபோது அவனை கோவையில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்து இருப்பதாக கூறி நாடகமாடினேன்.

இந்த நிலையில் போலீசார் ஒட்டிய மகனின் புகைப்படத்்தை பார்த்த எனது உறவினர் பெண் ஒருவர், அது முகம்மது உசேன்தான் என போலீசாரிடம் கூறி விட்டார். இதனால் போலீசாரிடம் மாட்டிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனநிலை பாதிக்கப்பட்ட மகனை தந்தையே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் திருவொற்றியூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!