நாட்டு மக்களின் உரிமையை பாதுகாக்க தேர்தல் அவசியமானது..!! மகிந்த தேசப்பரிய


ஜனநாயகம், வாக்குரிமை, மற்றும் ஒரு நாட்டின் மக்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கு தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்த வேண்டியது முக்கியமானது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்காளர் நாளை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அனுராதபுர மாவட்டச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“சிறிலங்காவின் வரலாற்றில் மோசடிகள் நிறைந்த மூன்று தேர்தல்கள் நடந்தன. 1999ஆம் ஆண்டு நடந்த வடமேல் மாகாணசபைத் தேர்தல். 1982இல் நடந்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு. 1981இல் நடந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் ஆகியனவே அவை.

யாழப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் போது, வாக்களிப்பு நிலையங்களில் கொழும்பு, குருநாகல பகுதிகளில் இருந்து, கொண்டு வரப்பட்ட வெளியாட்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இது, வாக்குப்பெட்டிகள் காணாமல்போக காரணமாயிற்று. பின்னர் சில வாக்குப் பெட்டிகள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட அன்றே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்தச் சம்பவம், மிதவாத தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் தேர்தல் மீதான நம்பிக்கையை உடைந்தது. வாக்குகளுக்குப் பதில் ரவைகள் என்ற நிலைக்கு அவர்கள் செல்ல வழியமைந்தது.

வடக்கில் ஆயுதக் குழுக்கள் பலமடைய, 1983 கலவரம் தான், காரணமானது என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், இந்தக் குழுக்களின் தோற்றுவாய் என்று, 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலைத் தான் நான் நினைக்கிறேன்,

1982 அதிபர் தேர்தலில், இளைஞர்களைப் பிரதிநிதித்துவம் செய்த அரசியல் கட்சி ஒன்று பெற்றுக் கொண்ட வாக்குகளை வைத்துப் பார்த்தால், 1983இல் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் அந்தக் கட்சிக்கு 5 தொடக்கம் 10 ஆசனங்கள் கிடைத்திருக்கும்.

ஆனால் இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படாததால் அவர்கள் தேர்தலின் மீது நம்பிக்கையிழந்தனர். இது அவர்களில் சிலர் ஆயுதம் ஏந்த வழியமைத்தது. இதன் தொடர்ச்சியாக 60 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

பொருத்தமற்ற தேர்தல்கள் மற்றும் தேர்தல்களைப் பிற்போடுவது, மரணங்களையும், அழிவுகளையும் தான் கொண்டு வரும்.

1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம், அப்போதைய அரசாங்கம் தனது பதவிக்காலத்தை ஐந்தில் இருந்து ஆறு ஆண்டுகளாக நீடித்தது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகி, புதிய தேர்தலை எதிர்கொண்டார். அது அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணம்.

வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தி, அங்குள்ள வாக்காளர்கள் தமது விருப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டியது, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் கடப்பாடு ஆகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.source-puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!