செவ்வாய் கிரகத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா..? ஆய்வில் அதிர்ச்சி..!


குரங்கில் இருந்து மனிதன் தோன்றி மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சி கண்டபோது ஆதி மனிதனின் காட்டு வாழ்க்கையானது மெல்ல மெல்ல குடியிருப்பு வாழ்க்கையாக மாறியது. பின்னர் மனிதன் விலங்குகளுடன் ஒன்றிய காட்டு வாழ்க்கையை முழுமையாக துறந்து நகர வாழ்க்கைக்கு மாறி விட்டான்.

கடந்த சில லட்சம் ஆண்டுகளில் ஏற்பட்ட மனிதனின் இந்த பரிணாம மற்றும் நாகரிக மாற்றம் காரணமாக தொடக்க கால மனிதனுக்குச் சொந்தமான காடு முழுமையாக விலங்குகளுக்கு சொந்தமானது.

அதுபோலவே, மனிதனுடைய தவறான வாழ்க்கைமுறை மற்றும் தொழிற்புரட்சி காரணமாக சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு, வெகு வேகமாக மனித வாழ்க்கைக்கு பொருத்தமில்லாத, ஆபத்தான இடமாக தற்போது மாறி வருகிறது.

இதே நிலை தொடர்ந்தால் மனித இனமும் பூமியிலுள்ள பிற இனங்களும் விரைவில் அழியும் என்கின்றன பல அறிவியல் கணிப்புகள். அதன் காரணமாக, பூமி தவிர்த்த மனித வாழ்க்கைக்கான இடங்களை விண் வெளியில், வேற்று கிரகங்கள் மற்றும் நிலவுகளில் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

அதன் விளைவாக, வேற்று கிரகங்களில் உள்ள மனித வாழ்க்கைக்கான சாத்தியக்கூறுகளும், மனிதன் அங்கு வாழும்போது அங்குள்ள ஆபத்தான தட்ப வெப்ப, காற்று மண்டல மற்றும் கதிரியக்க சுற்றுச்சூழல் ஆகியவை மனித உடலை எந்தெந்த வகையில் பாதிக்கும் என்று பல அறிவியல் உண்மைகள் தொடர்ந்து கண்டறியப்பட்ட வண்ணமாய் இருக்கிறது.

இதுவரையிலான விண்வெளி ஆய்வுகளின் பலனாக, கதிரியக்கம் மற்றும் விண்வெளியில் உள்ள, பூமியை விட மிகக்குறைந்த ஈர்ப்பு சக்தியான மைக்ரோ கிராவிட்டி (Microgravity) என்று சொல்லக்கூடிய நுண் ஈர்ப்பு சக்தி ஆகியவை கொண்ட செவ்வாய் கிரகம், இயல்பான மனித வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் மனித இனப் பெருக்கம் மற்றும் மனித குழந்தை வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஆபத்தாக இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனெனில், செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் பயணத்தின்போது மனிதர்கள் விண்வெளியில் உள்ள அதீத கதிரியக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். மேலும், செவ்வாய் கிரகத்தின் வளி மண்டலமானது மிகவும் மெல்லியது. அதனால், அங்கு பாயும் கதிரியக்கமானது செவ்வாய் கிரக நிலத்தில் வாழக்கூடிய மனிதர்களின் இனப்பெருக்க உயிரணுக்கள் மற்றும் திறன், மனித சிசு, குழந்தைகளின் வளர்ச்சி ஆகியவை மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் என்கிறார்கள் விண்வெளி ஆய்வாளர்கள்.


அடுத்ததாக, செவ்வாய் கிரக பயணம் மற்றும் அங்கு சென்றடைந்த பின்னர் அதன் நுண் ஈர்ப்பு சக்தியினால் மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, மைக்ரோ கிராவிட்டியானது மனித எலும்பின் அடர்த்தியைக் குறைத்து எலும்பு தேய்மானம் அல்லது இழப்பு, கண்கள் மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள திரவத்தின் அளவைக் குறைத்து கண் பார்வை இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, விண்வெளி பயணத்துடன் தொடர்புடைய ஆரோக்கியக் கேடுகளான நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நரம்பியல் மாற்றங்கள், காது கேளாமை மற்றும் இனப்பெருக்கத் தயார் நிலை இல்லாமை ஆகியவை செவ்வாய் கிரக மனித வாழ்க்கைக்கு எதிராக உள்ள பிற ஆபத்துக்கள் ஆகும்.

அதெல்லாம் சரி, ஒரு ஆணும் பெண்ணும் செவ்வாய் கிரகத்தில் குடியமர அல்லது தங்களின் வாழ்க்கையை தொடங்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

இதே கேள்வியை நோக்கமாகக் கொண்டு போலந்து நாட்டிலுள்ள யுனிவர்சிட்டி ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் மேனேஜ்மெண்ட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் கொண்ட ஒரு ஆய்வறிக்கை பியூச்சர்ஸ் (Futures) எனும் ஆய்விதழில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

அதில், செவ்வாய் கிரகத்தில் வாழ விரும்பும் ஆண், பெண் ‘கிறிஸ்பர்’ (CRISPR) போன்ற மரபணு மாற்றத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் தங்களின் உயிரணுக்களில் உள்ள டி.என்.ஏ.வில், இனப்பெருக்கத்திற்கு எதிரான செவ்வாய் கிரக சூழலை, ஆபத்துகளைத் தாக்குப்பிடிக்கத் தேவையான மரபணு மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர்.

முக்கியமாக, செவ்வாய் கிரக மைக்ரோ கிராவிட்டியானது மனித ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உயிரணுக்களில், கர்ப்பம் தரித்தல் மற்றும் பிரசவிப்பதில் எந்த வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறியும் ஆய்வுகள் உடனே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இந்த ஆய்வின் தொடக்கமாக, செவ்வாய் கிரகம், நிலவு அல்லது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் மனிதர்கள் கர்ப்பம் தரித்து, குழந்தை பெற்றுக்கொள்ள முயல வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர் போலந்து நாட்டு ஆய்வாளர்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!