ஃபேஸ்புக்கை தொடர்ந்து கூகுள் நிறுவனம் பற்றி வெளி வந்த திடுக்கிடும் தகவல்..!


ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனங்கள் சமூக வலைத்தள பயனர்களின் தகவல்களை சத்தமில்லாமல் சேகரித்து அவற்றை தேர்தல் முறைகேடு போன்றவற்றிற்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பல்வேறு நாடுகளால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் உங்களின் தகவல்களை வைத்திருப்பதற்கு வருந்துவோர் கூகுள் நிறுவனத்திடமும் உங்களது வருத்தம் மற்றும் அதிருப்தியை தெரிவித்து விடுங்கள்.

ஃபேஸ்புக் விவகாரத்தை தொடர்ந்து கூகுள் தன்னை பற்றி எந்தெந்த தகவல்களை சேகரிக்கிறது என்பதை அறிந்து கொள்ள தகவல் தொழில்நுட்ப வல்லுநர் டைலன் கர்ரன் முடிவு செய்தார். டெவலப்பர் என்ற அடிப்படையில் அவர் மேற்கொண்ட நடவடிக்கை அவரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உங்களுக்கும் இது அதிர்ச்சியான தகவலாகவே இருக்கும்.


கூகுளிடம் தன்னை பற்றி தகவல்களை கேட்டறிந்து பெற்ற டைலன், கூகுள் தான் செல்லும் இடங்கள், ஒவ்வொரு இடங்களுக்கும் செல்ல எடுத்து கொண்ட நேரம், பொழுதுபோக்கு விபரங்கள், விருப்பங்கள், உடல் எடை, வருமானம், செயலிகளில் உள்ள தகவல்கள், அழிக்கப்பட்ட தரவுகள் உள்ளிட்டவற்றை சேகரித்து வைத்திருப்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்.

பயனர் தகவல்களை கொண்டு கூகுள் சந்தேகிக்கும் வகையில் எதையும் செய்வதாக நினைக்கவில்லை என்றும், மிக நெருக்கமாக டிராக் செய்யப்படுவது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என டைலன் தெரிவித்திருக்கிறார். மேலும் இத்தகைய தகவல்களை வைத்திருக்கும் எவ்வித பெரிய நிறுவனங்களையும் நம்புவது தவறான செயல். அவர்கள் பணம் பெற முயற்சிக்கின்றனர். ஒருகட்டத்தில் எவரேனும் பெரிய தவறு செய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.


கூகுள் சேகரித்த தகவல்களை ட்விட்டர் மூலம் அம்பலப்படுத்திய டைலன் ட்விட்கள் சுமார் 1.5 லட்சம் முறை ரீட்வீட் செய்யப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் பல லட்சம் பேர் பயன்படுத்தும் கூகுள் சேவையில் அனைவரின் தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.

எனினும் கூகுள் சேகரிக்கும் தகவல்கள் மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படவில்லை, ஃபேஸ்புக் போன்று தகவல்கள் இதுவரை தவறாகவும் பயன்படுத்தப்படவில்லை. ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் ஐந்து கோடி பேரின் தகவல்கள் ரகசியமாக சேகரிக்கப்பட்டு அமெரிக்க தேர்தலில் பயன்படுத்தப்பட்டது அம்பலமானது.

இதுகுறித்து கேள்விக்கு கூகுள் செய்தி தொடர்பாளர் சார்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில் கூகுள் சேவையை பயன்படுத்துவோர் தங்களது ஆன்லைன் பிரைவசி விருப்பங்களை சீரான இடைவெளியில் பார்த்து அவற்றை விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களை அவர்களுக்கு வழங்கும் நோக்கில் கூகுள் பிரைவசி விருப்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் மை அக்கவுண்ட் (My Account) போன்ற ஆப்ஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பயனர்கள் இந்த சேவைகளை தொடர்ந்து பயன்படுத்துவதை ஊக்குவிப்போம் என கூகுள் சார்பில் வெளியாகியுள்ள பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகுள் விவகாரத்தில் அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மை அக்கவுண்ட் ஆப்ஷனில் பல்வேறு வசதிகளை வழங்குகிறது. இதை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் டிராக்கிங் ஹிஸ்ட்ரி (Tracking History) உள்ளிட்டவற்றை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் டிராக்கிங் வழிமுறைகளை ஆஃப் செய்யவும், அவற்றை அழிக்கவும் கூகுள் அனுமதிக்கிறது.


கூகுள் உங்களிடம் இருந்து சேகரித்து, நீங்கள் பார்க்க கூடிய தகவல்களின் விவரங்கள் பின்வருமாறு..,

– ஸ்மார்ட்போனில் கூகுள் சேவையை பயன்படுத்த துங்கியது முதல் நீங்கள் சென்ற இடங்களின் முழு மேப் தேதி மற்றும் நேரம் உள்ளிட்டவற்றுடன் பார்க்க முடியும்.

– அனைத்து சாதனங்களில் நீங்கள் மேற்கொண்ட தேடல்களின் விவரங்கள்

– உங்களின் விளம்பர் ப்ரோஃபைல்

– நீங்கள் பயன்படுத்தும் செயலிகள்

– உங்களின் ஒட்டுமொத்த யூடியூப் ஹிஸ்ட்ரி

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களையும் ஒரே ஃபைலாக வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்ய முடியும். இவற்றில் குறிப்பிட்ட தகவல்கள் ஏதேனும் வாடிக்கையாளர்கள் அழிக்க விரும்பினால், மூன்று புள்ளிகளை கிளிக் செய்து, டெலீட் அல்லது டிராஷ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து சேகரிக்கும் தகவல்களை கொண்டு ஒவ்வொருத்தருக்கும் ஏற்ப தனித்துவம் மிக்க தேடல் முடிவுகளை வழங்கவதோடு, அவர்களுக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்குவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுள் வலைத்தளத்தின் தனியுரிமை கொள்கைகளில் அந்நிறுவனம், வாடிக்கையாளர்களின் தகவல்கள் தனிப்பட்ட முறையில் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாத படி பொதுவெளியிலும், ஒப்பந்ததாரர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் இணைக்கப்பட்ட தளங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் தகவல்கள் சேவையை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களின் அனுமதியோடு அவற்றை பாதுகாப்பாக வைத்து, அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற பயன்படுத்தும் என கூகுள் தனது சமீபத்திய பிரைவசி டூல் அப்டேட்டில் தெரிவித்து இருந்தது.

கூகுள் சேவைகளை பயன்படுத்தும் போது, நீங்கள் உங்களது தகவல்களுடன் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். என கூகுள் தனியுரிமை கொள்கை பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.-
Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!