‘பேஸ் புக்’ நிறுவனம் பயனாளருக்காக எடுத்த அதிரடி நடவடிக்கை…!


உலக நாடுகளில் சமூக வலைத்தள பயன்பாட்டில் முக்கிய இடம் பிடித்து இருப்பது ‘பேஸ்புக்’. ஆனால் இதன் உபயோகிப்பாளர்கள் 5 கோடிப்பேரின் தனிப்பட்ட தகவல்கள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தல்களின்போது திருடப்பட்டு உள்ளன. இந்த திருட்டில் ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ என்னும் தேர்தல் தகவல்கள், தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதை ‘பேஸ்புக்’ நிறுவனர் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உறுதி அளித்தார்.

இந்த ஊழல் விவகாரத்தால் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் பங்குகள் 18 சதவீத அளவுக்கு சரிவை சந்தித்து உள்ளன. மேலும் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.6½ லட்சம் கோடி) வீழ்ச்சி அடைந்தது.


இதையடுத்து ‘பேஸ்புக்’ நிறுவனம், உபயோகிப்பாளர்களின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு பின்னர் ‘பேஸ்புக்’ தகவல்கள் மேலாண்மை எளிதாகும்; அமைப்பு மெனு மறுவடிவமைப்பு செய்யப்படும்; உபயோகிப்பாளர்கள் தங்கள் தகவல்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, புதிய ‘பிரைவேசி ஷார்ட்கட்ஸ் மெனு’ ஒன்றை ‘பேஸ்புக்’ அறிமுகம் செய்யும். இதைக்கொண்டு, உபயோகிப்பாளர்கள் தங்கள் ‘பேஸ்புக்’ பக்கத்தின் பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ள முடியும்; அவர்களது தகவல்களை யார், யார் பார்க்கிறார்கள், செயல்களை யார், யார் காண்கிறார்கள் என்பதை கண்டு நிர்வகிக்க முடியும். அத்துடன் அவர்கள் பார்க்கிற விளம்பரங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்று ‘பேஸ்புக்’ கூறுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!