பயங்கரவாதிகளால் நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் திரும்பி வந்தனர்..!


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சம அளவில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை நிறுவவேண்டும் என்ற கோரிக்கையுடனும், நோக்கத்தோடும் போக்கோஹரம் என்னும் பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவ மக்கள் பரவலாக வாழும் பகுதிக்குள் அதிரடியாக நுழையும் இந்த பயங்கரவாத குழுவினர், அங்குள்ள தேவாலயங்களை சூறையாடுவதுடன் அப்பாவி மக்களை கண்மூடித்தனமாக கொன்று குவித்து வருகின்றனர்.

மேலும், இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் ஆட்சி அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன் பள்ளி மாணவ-மாணவிகளை கடத்திச் சென்று, அவர்களை தற்கொலைப்படை தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு போர்னோ மாகாணம் சிபோக் நகரில் இருந்து 276 பள்ளி மாணவிகளை போகோஹரம் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். இவர்களில் பலர் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தனர். இருப்பினும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளின் கதி என்ன? என்பது இன்று வரை தெரியவில்லை.

இதற்கிடையில், யோப் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள தாப்சி நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை கடந்த மாதம் போகோஹரம் பயங்கரவாதிகள் சூறையாடினர். அங்கிருந்த சுமார் 110 மாணவிகளை துப்பாக்கி முனையில் அவர்கள் கடத்திச் சென்றனர்.

கடத்தப்பட்ட மாணவிகளை மீட்பதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தாப்சி நகர அரசுப் பள்ளியில் இருந்து கடந்த மாதம் கடத்திச் செல்லப்பட்ட மாணவிகள் இன்று அழைத்து வந்து விடப்பட்டதாக பெற்றோர் சிலர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று காலை சுமார் 8 மணியளவில் 9 வாகனங்களில் மாணவிகள் அனைவரும் வந்து சேர்ந்ததாக அவர்கள் கூறினர். கடத்திச் சென்ற போக்கோஹரம் பயங்கரவாதிகளே அவர்களை அனுப்பி வைத்ததாக நைஜீரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!