அப்பலோவில் ஜெ.வின் அனுமதியோடு 4 வீடியோக்கள் எடுக்கப்பட்டது – சசிகலா..!


முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு ஆலோசகர்கள், உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் இந்த விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. சம்மன் அனுப்பப்பட்ட பலரும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்களது வாக்குமூலத்தை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா தனது வாக்குமூலத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சசிகலா சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதில் இழுத்தடிக்கப்பட்டது. கால அவகாசம் கோரி சசிகலா அளித்த மனுவை விசாரணை ஆணையம் அண்மையில் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே, ஐந்து முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டும் சசிகலா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவில்லை என கூறியுள்ள ஆணையம், உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யப்படாவிட்டால் சசிகலாவிடம் நேரில் சென்று விசாரணை நடத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பிரமாண வாக்கு மூலத்தில் கூறப்பட்டு இருக்கும் முக்கியவிவரங்கள் வருமாறு:-


சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் ஜெயலலிதாவுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டது.

செப்டம்பர் 22-ல் உடல்நிலை சரியில்லாதபோதும் மருத்துவமனைக்குச்செல்ல ஜெயலலிதா மறுத்துவிட்டார்.

அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை அப்போதைய ஆளுநர் வித்யாசகர் ராவ், பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், தம்பிதுரை ஆகியோர் பார்த்தனர். அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்டோபர் 22-ம் தேதி அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தார். ஜெயலலிதாவும் அவரை கண்டு கையை உயர்த்தினார்.

போயஸ் இல்லத்தில் இருந்து அப்போலோ கொண்டு செல்லும் வழியில் ஜெயலலிதாவுக்கு ஒருமுறை சுயநினைவு வந்து என்னை எங்கே கூட்டிச் செல்கிறீர்கள் என கேட்டார்.


உடல்நிலை மோசமாக இருந்ததால் ஆர்கே நகரில் போட்டியிட ஜெயலலிதா முடிவு செய்தார்.

நான் நலமோடு இருக்கிறேன். சில நாட்கள் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், நாம் வீட்டிற்கு சென்று விடலாம்” என ஜெயலலிதா 27 செப்டம்பர் 2016 அன்று தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் அனுமதியோடு அவர் சிகிச்சை பெறும் 4 வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரமாண பத்திரத்தில் சசிகலா தெரிவித்து உள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!