முன்னாள் போலீஸ் ஏட்டுவை கொன்று உடலை ஆற்றில் வீசிய மகன்!

ஊத்தங்கரை அருகே காணாமல் போன முன்னாள் போலீஸ் ஏட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(48).

முன்னாள் போலீஸ் ஏட்டு. இவரது மனைவி சித்ரா(38), சிங்காரப்பேட்டை காவல் நிலைய எஸ்எஸ்ஐ. இவர்களது மகன் ஜெகதீஷ்குமார்(19). கடந்த 1997ல் போலீஸ் பணியில் சேர்ந்த செந்தில்குமார், பர்கூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஏட்டாக பணியாற்றினார்.

கடந்த 2009ல், கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து, தற்போது தேன்கனிக்கோட்டை டிஎஸ்பியாக பணியாற்றி வரும் முரளி மீது, காழ்ப்புணர்ச்சி காரணமாக, அவரது ஜீப்பை இரவு நேரத்தில் எடுத்துச் சென்று, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள பெரிய பள்ளத்தில் செந்தில்குமார் உருட்டி விட்டார்.

இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முன்னதாக கிருஷ்ணகிரியில் பணிபுரிந்த போது, ஆயுதப்படை போலீஸ் வாகனத்தை பாரூர் ஏரியில் தள்ளிவிட்ட வழக்கும் இருந்தது. இதையடுத்து கடந்த 2012ல், அவர் போலீஸ் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, ஊத்தங்கரை கவர்னர்தோப்பு பகுதியில் குடும்பத்தோடு வசித்து வந்த இவர், கடந்த செப்டம்பர் 16ம் தேதி மாயமானார். அவரது தாய் பாக்கியம்(65) கல்லாவி போலீசிலும், கடந்த அக்டோபர் 31ம் தேதி, கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கடந்த செப்டம்பர் 16ம் தேதி மாயமான செந்தில்குமார் மற்றும் அவரது மகன் ஜெகதீஷ்குமார், மற்றொருவரின் செல்போன் சிக்னல் ஒரே இடத்தை காட்டியுள்ளது. பின்னர், ஒரே நேரத்தில் சுவிட்ச் ஆப் ஆனதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜெகதீஷ்குமாருடன் இருந்த மற்றொரு செல்போன் எண்ணை வைத்து விசாரித்ததில், அவர் ஊத்தங்கரை அடுத்த பாவக்கல்லை சேர்ந்த கமல்ராஜ்(37) என்பது தெரிந்தது. அவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.


இந்நிலையில், நேற்று முன்தினம் அவர்கள் இருவரையும், ஊத்தங்கரை போலீசார் பிடித்து விசாரித்து மறுநாள் வரும்படி அனுப்பினர். இதனால் பயந்துபோன அவர்கள் நேற்று கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீவத்சவா முன்பு ஆஜராகி, கடந்த செப்டம்பர் 16ம் தேதி செந்தில்குமாரை அடித்துக் கொலை செய்து, பாவக்கல் அருகே தென்பெண்ணையாற்றில் வீசியதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, செந்தில்குமார் கொலை குறித்து அவரது மனைவியும், எஸ்.எஸ்.ஐ.,யுமான சித்ராவிடம், ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-News & image Credit: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!