வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைந்தது!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 28-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து நவம்பர் மாதத்தில் பெய்த மழையால் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை பெய்து வருவதால் ஏரி, குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. நவம்பரில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்று நல்ல மழையை கொடுத்தது.

சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும் டெல்டா மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால் ஏரிகள் நிரம்பின.

அதனை தொடர்ந்து உருவான மற்றொரு காற்றழுத்தம் மூலம் பருவமழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவற்றின் மூலம் மழை பெய்யாததால் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்தது. 8-ந்தேதி அது தீவிர புயலாக உருவானது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயர் வைக்கப்பட்டது.

இந்த புயல் வடதமிழகத்தை நோக்கி வந்து 9-ந்தேதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. மாண்டஸ் புயல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றது.

மாண்டஸ் தற்போது அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து சோமாலியாவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் அந்தமானுக்கு தென்கிழக்கு பகுதியிலும் வடக்கு சுமத்ரா கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சி உருவாகியது. இது நேற்று காற்றழுத்தமாக வலுவடைந்துள்ளது. இது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மத்திய கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியை சுற்றி நிலவி மேற்கு-வடமேற்கு திசையில் 9 கி.மீ. வேகத்தில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவடைந்தது.

இதன் காரணமாக அந்தமான் தீவு மற்றும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 19-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் மீனவர்கள் தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு இன்று முதல் 17-ந்தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கிழக்கு காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 19-ந்தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு மழை மற்றும் புயல் பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!