20 கோடி ஆண்டுகளாக குமுறும் எரிமலை… செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் சாத்தியமா…?

செவ்வாய் கிரகம் 20 கோடி ஆண்டுகளாக உட்புறத்தில் எரிமலை குமுறலுடனும் வெளிப்புறத்தில் அமைதியாகவும் காணப்படுகிறது என விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்து உள்ளனர்.

நமது பூமியில் அவ்வப்போது நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் ஏற்படுவதும், அதன் தாக்கத்தினால் பலர் பாதிக்கப்படுவது பற்றிய தகவலை நாம் கேள்விப்பட்டு இருப்போம். நமது அண்டை கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்தில் நிலைமையே வேறு. கடந்த 300 கோடி ஆண்டுகளாக அதுபோன்ற விசயங்கள் எதுவும் நடைபெறாமல் அமைதியாக உள்ளது.

இதனால், செவ்வாயை ஓர் இறந்த கிரகம் என பலரும் நினைக்கும் அளவில் உள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள எல்.பி.எல். என்ற நிலவு மற்றும் கோள்கள் பற்றிய ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராக இருப்பவர் ஜெப் ஆண்ட்ரூஸ்-ஹன்னா கூறும்போது, பூமி மற்றும் வெள்ளி கிரகங்களில் எரிமலை வெடிப்புக்கான வலிமையான சான்றுகள் நம்மிடம் உள்ளன.

ஆனால், செவ்வாய் கிரகத்தில் அதுபோன்ற எதுவும் காணப்படவில்லை. 300 கோடி முதல் 400 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகம் தீவிர செயல்பாட்டுடன் இருந்தது. ஆனால், தற்போது செயல்பாடின்றி அந்த கிரகம் உள்ளது என காணப்பட்டது.

இந்த சூழலில், செவ்வாய் கிரகத்தின் வடபுறத்தில், செவ்வாய் கிரகத்தின் மைய பகுதியை ஒட்டிய சமவெளியான எலிசியம் பிளேனிசியா என்ற பகுதியானது ஆச்சரியப்படும் வகையில் செயல்பாட்டுடன் உள்ளது விஞ்ஞானிகளுக்கு தெரிய வந்துள்ளது.

இந்த எலிசியம் பகுதியில் கடந்த 20 கோடி ஆண்டுகளாக பெரிய அளவில் வெடிப்புகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதன்படி, கடைசியாக 53 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் வெடிப்பு ஏற்பட்டு எரிமலை சாம்பல் வெளிவந்து உள்ளது என ஹன்னா கூறுகிறார்.

செவ்வாய் கிரகத்தில், இந்த இடைப்படுகையில் இருந்து வெளிவரும் எரிமலை குழம்பு மற்றும் புகையானது, அமெரிக்க கண்டத்திற்கு இணையான பரப்பளவை கொண்ட பகுதியை பாதித்து உள்ளது தெரிய வந்துள்ளது. அதனால், வருங்காலத்தில் இதுபற்றிய ஆய்வானது, இதற்கு முன் எதிர்பார்த்திராத வகையில் மிக பெரிய அளவில் எரிமலை குழம்பை வெளிப்படுத்தும் இடைப்படுகையை பற்றி கண்டறிவதற்கான வழியாகவும் அது இருக்கும் என கூறப்படுகிறது.


இந்த இடைப்படுகையானது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை மேல் நோக்கி தள்ளும் செயல்பாடுகளை கொண்டது. அது நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கண்டறியப்பட்டு உள்ளது.

இதுவரை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு மிக அமைதியாக காணப்படுவது போல் தோன்றினாலும், அதன் உட்பகுதியில் அதிகளவில் இதுபோன்ற ஆற்றல் மிக்க இடைப்படுகைகள் மறைந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.

இதனால், கடந்த 300 கோடி ஆண்டுகளாக செயல்பாடற்ற நிலையில் செவ்வாய் உள்ளது என்ற விஞ்ஞானிகளின் முடிவுகளுக்கு மாற்றாக அது அமைந்துள்ளது. நம்முடைய பூமியில் பசிபிக் தட்டுகள் மெதுவாகஇடைப்படுகையின் மீது நகர்ந்து ஹவாய் தீவு கூட்டங்கள் உருவான நிகழ்வை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ளலாம்.

நாசா குழுவும் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் அனைத்து நிலநடுக்கங்களும் எலிசியம் என்ற இந்த ஒரு பகுதியில் இருந்தே வெளிப்பட்டு இருக்கும் என சமீபத்தில் கண்டறிந்து உள்ளது.

இந்த இளம் எரிமலை மற்றும் மேற்பரப்பு செயல்பாடுகள் பற்றி அறியப்பட்டாலும், அதன் அடிப்பகுதியில் என்ன உள்ளது என்பது ஆய்வாளர்களுக்கு இன்னும் தெரியவரவில்லை.

பூமியில் எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்படுவது என்பது, இடைப்படுகைகள் அல்லது பிளேட்டுகள், நகர்ந்து செல்லும் கண்டங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது. ஆனால், செவ்வாய் கிரகத்தில் இதுபோன்ற தட்டுகள் காணப்படுவதில்லை.

அதனால், இந்த எலிசியம் என்ற பகுதியானது,செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் 800 மைல்கள் தொலைவுக்கு பரவியுள்ள செர்பிரெஸ் போஸ்சே என்ற பெயரில் அழைக்கப்படும் வெடிப்புகளின் தொகுப்பு பகுதியில் இருந்து உருவாகி இருக்க கூடும் என கூறப்படுகிறது.

இந்த செயல்பாடுகளால், செவ்வாய் கிரகத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டு உள்ள நாசாவின் இன்சைடு விண்கலம் பதிவு செய்ய கூடிய நிலம், மேற்பரப்பு மற்றும் அது சார்ந்த தரவுகளில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்றும் கூறப்படுகிறது.

எனினும், இந்த இடைப்படுகை பற்றிய ஆய்வானது, செவ்வாய் கிரகத்தின் நிலம் சார்ந்த பரிணாம வளர்ச்சியை புரிந்து கொள்வதற்கு உதவும். இந்த ஆய்வு பகுதியில் திரவ நிலையிலான நீர் பெருக்கெடுத்து வெள்ளம் சென்ற தடமும் தெரிய வந்துள்ளது.

இதற்கான காரணம் மர்மம் நிறைந்த ஒன்றாக உள்ளபோதும், இடைப்படுகையினால் ஏற்பட்ட பெரும் புகையில் இருந்து வெளிப்பட்ட வெப்பம், எரிமலை மற்றும் நிலநடுக்கம் சார்ந்த விசயங்களால், பனிக்கட்டிகள் உருகி வெள்ளம் ஏற்பட்டு இருக்க கூடும்.

அதனால், வேதிவினைகள் ஏற்பட்டு ஆழ்ந்த நிலத்திற்கடியில் உயிர்கள் தோன்றுவதற்கான சாத்தியமும் காணப்படும் என கூறப்படுகிறது.

இதுபோன்ற சுற்றுச்சூழலில் பூமியில் உள்ள நுண்ணுயிரிகள் வாழ கூடும். அது செவ்வாய் கிரகத்திலும் கூட உண்மையாக கூடும் என ஹன்னா கூறுகிறார். அதனால், வருங்காலத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் வெளிவர தயாராக உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!