யூகி திரைவிமர்சனம்!

போலீஸ் உயர் அதிகாரியாக இருக்கும் பிரதாப் போத்தன், சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருகிறார். இந்நிலையில் இவருக்கு உதவியாக செயல்பட்டதாக கூறப்படும் ஆனந்தி மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார்.

ஆனந்தியை அரசியல் அமைப்பு சார்பாக நட்டியும், பிரதாப் போத்தன் சார்பில் டிடெக்டிவ் ஏஜென்சியை சேர்ந்த நரேனும் தேடுகிறார்கள். இறுதியில் ஆனந்தியை யார் கண்டு பிடித்தார்கள்? ஆனந்தியை கடத்தியது யார்? பிரதாப் போத்தன் பிடிப்பட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கதிர், வித்தியாசமான நடிப்பை கொடுத்து கவர்ந்து இருக்கிறார். இவர் டிடெக்டிவ் ஏஜென்சி நரேனுடன் இணைந்து ஆனந்தியை தேடுகிறார். இவருடைய கதாபாத்திரத்தின் திருப்பம் எதிர்பார்த்திராத வகையில் திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள். நாயகியாக வரும் ஆனந்தி இரண்டாம் பாதியில் தன்னுடைய நடிப்பால் திரைக்கதையை தாங்கி பிடித்து இருக்கிறார்.

இவருடைய அழுத்தமான நடிப்பு பார்ப்பவர்களை நெகிழ வைத்து இருக்கிறது. டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நரேன், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சாமி கதாபாத்திரத்தில் வரும் நட்டி, பென்ஸ் காரில் அதிக நேரம் உலா வந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் அமையவில்லை. தனக்கே உரிய பாணியில் அசத்தி இருக்கிறார் ஜான் விஜய். கொடுத்த வேலையை செய்து இருக்கிறார் ஆத்மியா. மற்றொரு கதாநாயகியாக வரும் பவித்ரா லட்சுமிக்கு வித்தியாசமான கதாபாத்திரம். ஆனால் பெரியதாக எடுபடவில்லை. கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜாக் ஹாரிஸ்.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதை வேகமாக நகர்கிறது. அடுத்தடுத்து யூகிக்க முடியாத அளவுக்கு காட்சிகள் அமைத்து இருக்கிறார்கள். ஆனால், இறுதியில் திரைக்கதை செல்லும் வேகத்தில் சற்று குழப்பம் ஏற்படுகிறது. சொல்லவந்ததை சுருக்கமாக சொல்லி இருக்கலாம். கணவன் மனைவி பாசம், வாடகைதாய் விஷயம், முன்னணி நடிகர்களின் பவர் என திரைக்கதையில் பல விஷயங்களை இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

ரஞ்சின் ராஜ் இசையில் பாடல்களை ஒரு முறை கேட்டு ரசிக்கலாம். பின்னணி இசையை ஆங்காங்கே ரசிக்க முடிகிறது. புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. மொத்தத்தில் யூகி – யூகிப்பது கடினம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!