மகளை முதல் முறையாக அறிமுகப்படுத்திய கிம் ஜாங் அன்!

கிழக்கு ஆசிய நாடான வடகொரியா பெரும்பாலும் ஒரு மர்ம தேசமாக இருந்து வருகிறது. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது அவ்வளவு எளிதாக வெளியுலகத்துக்கு தெரிந்துவிடாது.

இந்த மர்ம தேசத்தை கடந்த 2011-ம் ஆண்டு முதல் வழிநடத்தி வருபவர் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன். நாட்டில் என்ன நடக்கிறது என்பது எப்படி வெளியுலகத்துக்கு தெரியாதோ, அதே போலவே கிம் ஜாங் அன்னின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவலும் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.

கிம்முக்கு அடுத்தபடியாக அதிகாரமிக்க தலைவராக அவரது சகோதரி கிம் யோ-ஜோங் அறியப்படுகிறார். இவரை தவிர்த்து கிம்மின் மனைவி குறித்தோ அவரது பிள்ளைகள் குறித்தோ பெரிதாக எந்த தகவல்களும் கசிந்தது இல்லை.

திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகே கிம்மின் மனைவி ரி சோல் ஜூ வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். கிம்முக்கு 3 குழந்தைகள் இருப்பதாகவும். அதில் இருவர் பெண் குழந்தைகள், ஒருவர் ஆண் குழந்தை என்றும் கூறப்படுகிறது.

இதுவரை அவர்கள் பொதுவெளியில் தோன்றியதில்லை. இந்த நிலையில் கிம் முதல் முறையாக தனது மகளை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். கிம் மகளின் பெயர் கிம் ஜூ அய் என்றும், அவர் கிம்மின் மூத்த மகள் என்றும் நம்பப்படுகிறது.

வடகொரியா நேற்று முன்தினம் அமெரிக்கா வரை சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது. இந்த சோதனையை கிம் தனது மகள் கிம் ஜூ அய்யுடன் சேர்ந்து நேரில் ஆய்வு செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வடகொரியா அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

சமீபகாலமாக கிம்மின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் அவர் தனது மூத்த மகளை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம், தனக்கு பிறகு தனது மகள் அதிகாரத்துக்கு வருவதை அவர் சூசகமாக சொல்வதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!