பரோல் திரைவிமர்சனம்!

சிறு வயதிலேயே தந்தையை இழந்த இரு பிள்ளைகளை தனி ஆளாய் வளர்த்து வருகிறார் தாய் ஆராயி (ஜானகி சுரேஷ்). இவர், தனது முதல் மகன் கரிகாலன் (லிங்கா) மீது அதிக பாசம் வைத்திருக்கிறார். இதனால் பொறாமை கொள்ளும் இரண்டாவது மகன் கோவலனுக்கு (ஆர்.எஸ்.கார்த்திக்) தன் அண்ணன் மீது கோபம் ஏற்படுகிறது.

இதனிடையே தனது தாயை தவறான பார்வையில் பார்க்கும் ஒரு நபரை கரிகாலன் கல்லை கொண்டு அடித்து விடுகிறான். இதனால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்லும் கரிகாலனிடம், சிறையில் சிலர் தவறான முறையில் நடந்து கொள்கிறார்கள்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கரிகாலன் ஒரு கட்டத்தில் அங்கிருப்பவர்களை கொலை செய்துவிடுகிறான். தன் மகனை எப்படியாவது சிறையில் வெளியே எடுக்க தாய் போராடுகிறார். கொலை செய்த அண்ணனை வெளியே எடுக்க முயற்சி செய்யும் தாய் மீது கோபம் அடையும் கோவலன், அண்ணனை வெளியே வராதபடி திட்டம் தீட்டுகிறான்.

இதனிடையே நான் மரணித்தாவது தன் மகனை வெளியே எடுக்க வேண்டும் என்று முயற்சிக்கும் தாய் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். தன் தாயின் இறுதி சடங்குகளை தானே செய்து முடித்துவிடலாம் என்று திட்டம் போடும் கோவலனுக்கு கரிகாலனின் கூட்டாளிகளிடம் இருந்து பிரச்சினைகள் வருகிறது.

இதனால் வேறு வழியில்லாமல் தனது அண்ணனை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறான். இறுதியில் தனது அண்ணனை பரோலில் வெளியே கோவலன் எடுத்தானா? பரோலில் எடுப்பதற்காக கோவலன் எடுக்கும் முயற்சிகள் வெற்றிப் பெற்றதா? தாயின் இறுதி ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. கரிகாலனாக நடித்திருக்கும் லிங்கா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பின்னணி இசையுடன் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மாஸ் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். தன்னுடைய எதார்த்த நடிப்பால் பல உணர்வுகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார். கோவலனாக வரும் ஆர்.எஸ்.கார்த்திக் தன்னுடைய கோபமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.

அண்ணனை வெளியே எடுக்க இவர் போடும் திட்டத்தில் இவரின் நடிப்பு கதையின் விறுவிறுப்பை கூட்டுகிறது. கோபத்தின் உச்சத்தில் மனிதர்கள் எடுக்கும் தவறான முடிவுகளை தங்களின் நடிப்பின் மூலம் இரு கதாநாயகர்களும் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். கதாநாயகிகளாக வரும் கல்பிகா மற்றும் மோனிஷா முரளி இருவரும் கொடுத்த பணியை சரியாக செய்து முடித்துள்ளனர்.

தாய் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜானகி சுரேஷின் நடிப்பு ரசிக்கும்படி இருந்தாலும் சில இடங்களில் மிகையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது போன்று தோன்றுகிறது. வக்கீலாக வரும் வினோதினி தனிகவனம் பெறுகிறார். நீதிமன்ற காட்சிகளில் நடக்கும் இவரின் உரையாடல்கள் கைத்தட்டல்களை பெறுகிறது.

பரோலில் எடுப்பதற்காக முயற்சிக்கும் போராட்டம் என்பதை மையக்கருவாக எடுத்துக் கொண்ட இயக்குனர் துவராக் ராஜா, அதற்கு பின்னால் நடக்கும் விஷயங்களை திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்திருக்கு பாராட்டுக்கள்.

புதிய கதைக்களமும் புதுமாதிரியான திரைக்கதையை வைத்து கவனம் ஈர்த்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் திரைக்கதையின் நீரோட்டத்தினால் காட்சிகளை புரிந்துக் கொள்வது கடினமாக உள்ளது. சில இடங்களில் தேவையற்ற வசனங்களை தவிர்த்திருக்கலாம். படத்தின் இறுதியில் கதாநாயகர்கள் எடுக்கும் முடிவு சிறப்பு.

இயக்குனர் நினைத்த விஷயங்களை தனது ஒளிப்பதிவின் மூலம் பூர்த்தி செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ். ராஜ்குமார் அமலின் பின்னணி இசை திரைக்கதைக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

வடசென்னையை காட்சிப்படுத்திவிட்டு அம்மக்களின் வாழ்வியலில் ஒன்றிருக்கும் பறை இசை கருவிகள் மற்றும் கானா பாடல்கள்களை பயன்படுத்தாதது எதார்த்திலிருந்து விலகி இருக்கிறது. மொத்தத்தில் பரோல் விறுவிறுப்பு.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!