கடனுக்காக குழந்தைகளை தூக்கிச்சென்ற மகளிர் குழு… செய்தியறிந்த தாயின் விபரீத முடிவு…!


மானாமதுரை அருகே கடனை திருப்பி செலுத்தாததால் இளம்பெண்ணின் குழந்தைகளை மகளிர் குழுவினர் தூக்கிச்சென்றனர். இதனால் விரக்தியடைந்த அப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கொம்புகாரனேந்தல் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 27). இவர் கோவையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கொங்கேசுவரி(21).

இவர்களுக்கு கதிர்வேல்(4), பிரியங்கா(2½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கொங்கேசுவரி அப்பகுதியில் மகளிர் சுயஉதவி குழுவில் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அந்த கடனை அவரால் செலுத்த முடியவில்லை.

இதனால் மகளிர் குழுவினர் அவரை கடனை திருப்பி செலுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். கடனை செலுத்த முடியாததால் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கொங்கேசுவரி, கலியனேந்தலில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் நேற்று கொம்புகாரனேந்தல் மகளிர் சுயஉதவி குழுவினர் கலியனேந்தலில் உள்ள கொங்கேசுவரியின் பெற்றோர் வீட்டிற்கு கடனை கேட்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு கொங்கேசுவரி இல்லை.

இதனையடுத்து மகளிர் குழுவினர் கொங்கேசுவரியின் தாயார் நாகம்மாள், தம்பி மாயகண்ணன்(8) மற்றும் அவருடைய குழந்தைகள் கதிர்வேல், பிரியங்காவை அழைத்துக்கொண்டு கொம்புகாரனேந்தலுக்கு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து அறிந்த கொங்கேசுவரி குழந்தைகளை தூக்கி சென்ற விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் கொங்கேசுவரியின் உடல் மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

கொங்கேசுவரி இறந்த செய்தியை அறிந்த மகளிர் குழுவினர் அவருடைய தாயாரையும், குழந்தைகளையும் விடுவித்தனர். இதனையடுத்து தாயார் நாகம்மாள், குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

குழந்தைகளுடன் அங்கு இருந்த நாகம்மாளுக்கு ஆதரவாக யாரும் இல்லாததால் பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து கொங்கேசுவரியின் கணவர் கணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பழையனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!