ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் விபத்து!

பைந்தூர் அருகே சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் மோதியதில் நோயாளி உள்பட 4 பேர் பலியானார்கள். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த விபத்து தொடர்பான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சுங்கச்சாவடி தூண் மீது ஆம்புலன்ஸ் மோதல்

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் ஒன்னாவரில் இருந்து உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள ஆஸ்பத்திரி நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியுடன் நேற்று மாலை சென்றது. உடுப்பி, பைந்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட சிரூர் பகுதியில் சுங்கச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது சுங்கச்சாவடி அருகே வந்தபோது டிரைவர், ஆம்புலன்ஸ் பிரேக் பிடித்து வேகத்தை குறைக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் சாலையில் மழைநீர் தேங்கி இருந்ததால் ஆம்புலன்ஸ் தறிகெட்டு ஓடியது. இதற்கிடையே இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் தடுப்பு வேலியை எடுத்தார். மேலும் மற்றொருவர், சுங்கசாவடி அருகே படுத்திருந்த மாட்டை விரட்டினார். ஆனால் அதற்குள் கண்ணிமைக்கும நேரத்தில் ஆம்புலன்ஸ் சுங்கச்சாவடி தூண் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

4 பேர் பலி

இதில் ஆம்புலன்ஸ், தடுப்பு வேலியை எடுத்த சுங்கச்சாவடி ஊழியர் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்சின் பின்புற கதவு திறந்து உள்ளே இருந்தவர்கள் வெளியே தூக்கிவீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதாவது ஆம்புலன்சில் இருந்த 4 பேர் வெளியே தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்து பலியானார்கள். மேலும் விபத்தில் சுங்கச்சாவடி ஊழியர், ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருேக உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த பைந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் பலியான நோயாளி உள்பட 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

விசாரணையில், பலியானவர்கள் உத்தரகன்னடா மாவட்டம் ஒன்னாவர் அருகே அடகேரியை சேர்ந்த லட்சுமண நாயக், அவரது மனைவி ஜோதி நாயக் மற்றும் உறவினர்கள் மகாதேவ நாயக், லோகேஷ் நாயக் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் லட்சுமண நாயக் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளார்.

அவரை, குந்தாப்புராவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மனைவி, உறவினர்கள் அழைத்து சென்றபோது விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது. மேலும் விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ரோஷன், சுங்கச்சாவடி ஊழியர் சம்பாஜி உட்பட 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து வீடியோ வைரல்

இந்த விபத்து தொடர்பான காட்சிகள் சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் விபத்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விபத்து குறித்து பைந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!