முதல் முறையாக தன்னை தானே திருமண செய்து கொள்ளும் இந்திய பெண்!

இந்தியாவில் முதல் முறையாக குஜராத்தில் பெண் ஒருவர் தன்னைத்தானே ஜூன் 11ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார். வதேரா குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து(24 ). எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ளார்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஷாமாவும் மற்ற இந்திய பெண்களைப் போலவே ஜூன் 11ஆம் தேதி நடைபெறவுள்ள தன்னுடைய திருமணத்துக்கும் தயாராகி வருகிறார். திருமணத்துக்கான பிரேத்யேக ஆடை மற்றும் அனைத்து சம்பிராதாயங்களும் இவருடைய திருமணத்தில் நடைபெறவுள்ளது. இவருடைய திருமணத்தில் பங்கேற்க சில உறவினர்களையும் இவர் அழைத்துள்ளார்.

இந்த திருமணத்தில் மணமகன் மட்டுமே இல்லையே தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு முதல்முறையாக குஜராத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஷாமா பிந்து கூறியதாவது:- சிறு வயதில் இருந்தே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்தேன். திருமணம் எனும் பாரம்பரியம் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், நான் ஒரு மணமகளாக வேண்டும் என விரும்பினேன். அதனால், என்னை நானே மணந்துகொள்ள முடிவு செய்தேன். இது சோலோகேமி என அழைக்கப்படுகிறது.

ஒரு வெப்சீரிஸில் நடிகை ஒருவர் , எல்லா பெண்களும் மணமகளாக விரும்புகிறார்களே தவிர மனைவியாக அல்ல என பேசியிருப்பார். இதைக் கேட்டவுடன் என்னை நானே மணந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மீண்டும் தோன்றியது. இதுபோன்று இந்தியப் பெண்கள் யாராவது திருமணம் செய்திருக்கிறார்களா என்று ஆன்லைனில் தேடிப் பார்த்தேன். ஆனால், யாரும் அப்படி செய்துகொள்ளவில்லை.

திருமணத்தைப் புனிதமாகக் கருதும் இந்திய நாட்டில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன். பெண்கள் தாங்கள் விரும்புபவரை திருமணம் செய்து கொள்வார்கள். இந்த திருமணம் மூலம் என்னை நானே காதலிக்கப் போகிறேன். என்னுடைய பெற்றோர் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

அவர்களுக்கும் இதில் மகிழ்ச்சிதான். எனது மெஹந்தி நிகழ்ச்சி ஜூன் 9ஆம் தேதியும், திருமணம் ஜூன் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கும் நடைபெறவுள்ளது என்றார். திருமணம் முடிந்த பின்னர் இரண்டு வாரம் ஷாமா ஹனிமூனுக்கு கோவாவுக்கும் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!