ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் பற்றி வெளி வந்த சுவாரஸ்ய தகவல்..!


ஹூவாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்வாட்ச்களில் பயன்படுத்த புதிய காப்புரிமையை ஹூவாய் பதிவு செய்திருக்கிறது. சர்வதேச அறிவுசார் சொத்து நிறுவனத்தில் (World Intellectual Property Organization-WIPO) ஹூவாய் பதிவு செய்து இருக்கும் காப்புரிமையில் ஸ்மார்ட்வாட்ச்சில் வழங்கப்பட இருக்கும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

ஹூவாய் சார்பில் பதிவு செய்யப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பம் அல்ட்ராசோனிக் அல்லது இன்ஃப்ராரெட் கதிர்களை ஒளிர வைக்கிறது. இந்த அல்ட்ராசோனிக் அல்லது இன்ஃப்ராரெட் கதிர்கள் விரல் அசைவுகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்வாட்ச் கையில் மாட்டி இருக்கும் போது ஸ்மார்ட்வாட்ச்-ஐ சுற்றி அல்ட்ராசோனிக் அல்லது இன்ஃப்ராரெட் கதிர்கள் ஒளிரும். எனினும் ஸ்மார்ட்வாட்ச்-இல் இருக்கும் சென்சார் சரிவர இயங்க கையில் சரியான அளவில் அதனை மாட்டியிருப்பது அவசியமாகும் என காப்புரிமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கைகளின் பின்புறம் எதையேனும் எழுதினால், அதுவும் ஸ்மார்ட்வாட்ச்-இல் தெரியும். இந்த தொழில்நுட்பம் சிறிய சாதனங்களை இயக்கும் போது ஏற்படும் சிரமத்தை களைய வழி செய்யும். இதில் வழங்கப்படும் சென்சார் நான்கு திசைகளிலும் கதிர்களை ஒளிர விடும் என்பதோடு ஜெஸ்ட்யூர்களை வரையவும் முடியும்.

ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான ஜெஸ்ட்யூர்களை ஸ்மார்ட்வாட்ச்களிலும் பயன்படுத்த முடியும். இருமுறை கிளிக் செய்வது, நீண்ட அழுத்தம், அல்லது பலவிரல் ஜெஸ்ட்யூர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஸ்மார்ட்வாட்ச்-ஐ இயக்க முடியும். புதிய ஸ்மார்ட்வாட்ச் மூலம் புதிய வகையில் எழுதும் வசதியை ஹூவாய் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

ஹூவாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்வாட்ச்களில் இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 2017-ம் ஆண்டு ஹூவாய் அறிமுகம் செய்த ஸ்மார்ட்வாட்ச் வாட்ச் 2 என அழைக்கப்பட்ட நிலையில், அடுத்த ஸ்மார்ட்வாட்ச் வாட்ச் 3 என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!