தலையில் கல்லால் அடித்து… பள்ளி மாணவனுக்கு நடந்த கொடூரம்!

அரியலூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 11-ம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்து கொன்றது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், தா பழூர் அருகே உள்ள பொற்பொதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகன் மணிகண்டன் (வயது 16). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தாய் லலிதா உடல்நலக் குறைவால் இறந்தார். அதன் பிறகு தந்தை மதியழகன் மறுமணம் செய்து கொண்டு அருகிலுள்ள வனதிராயன்பட்டினம் கிராமத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மணிகண்டன் தனது தாய்வழி தாத்தா-பாட்டி ராமசாமி, பாப்பாத்தி ஆகியோர் பராமரிப்பில் பொற்பொதிந்தநல்லூர் கிராமத்தில் வளர்ந்து வருகிறார். மணிகண்டனின் அண்ணன் முருகன் அமிர்த ராயன் கோட்டை கிராமத்தில் உள்ள அவர்களது பெரியம்மா வீட்டில் வளர்ந்து தற்போது டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

மணிகண்டன் அரியலூரில் தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அவ்வப்போது தாத்தா பாட்டியை பார்க்க பொற்பொதிந்தநல்லூர் கிராமத்திற்கு வந்து செல்வது வழக்கம். தற்போது 11ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வரும் சூழ்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் முன் பகுதியில் படுத்து தூங்கியுள்ளார். அவரது தாத்தா பாட்டி இருவரும் அருகில் உள்ள இன்னொரு சிறிய வீட்டில் படுத்து தூங்கி உள்ளனர். காலை எழுந்து பார்த்தபோது வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த மணிகண்டன் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருந்த காட்சி மணிகண்டனின் தாத்தா பாட்டியை குலை நடுங்க வைத்தது.

படுத்து தூங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் இறந்து கிடந்தது குறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர். அரியலூரில் இருந்து நேற்று மர்ம நபர்கள் சிலர் பொற்பொதிந்தநல்லூர் கிராமத்திற்கு வந்து மணிகண்டனுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. காதல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!