பழைய சைக்கிளை வாங்கி வந்த தந்தை… துள்ளி குதிக்கும் சிறுவன்!

தந்தை பழைய சைக்கிளை வாங்கி வந்த போதிலும் எங்களுக்கு இது புதுசு என துள்ளி குதிக்கும் சிறுவனின் மனம் கவரும் வீடியோ வைரலாகி வருகிறது.

நம்மூரில் வசதியான, ஆடம்பர வாழ்க்கை என பலர் வாழ்ந்தபோதும் அதில் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறதா? என்றால் விடை தேட வேண்டி வரும்.

ஒரு காலத்தில் ஆடம்பர பொருட்களாக இருந்தவை கூட இன்று அத்தியாவசிய பொருட்களாகி விட்டது. ஆனால், சமூகத்தில் வசதி குறைந்தவர்கள் தங்களுக்கு தேவையாக இருக்க கூடிய அத்தியாவசிய பொருளை கூட ஆடம்பர பொருளாகவே பார்க்கிறார்கள். கவனமுடன் கையாள்கிறார்கள்.

ஒரு மனிதருக்கு குப்பையாகி போன பொருள் மற்றொரு மனிதருக்கு பொக்கிஷம் ஆக மாற கூடும் என கூறப்படும் பழமொழியை மெய்ப்பிப்பது போன்றதொரு வீடியோ வைரலாகி வருகிறது. தந்தை ஒருவர் வேறொருவர் பயன்படுத்திய சைக்கிளை விலைக்கு வாங்கி கொண்டு தனது வீட்டுக்கு வருகிறார். அதனை பார்த்தவுடன் சிறுவனான அவரது மகனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதனால் துள்ளி குதிக்கிறான்.

சிறுவனின் தந்தை சைக்கிளை வெளியே எடுத்து செல்வதற்கு முன், அதற்கு பூமாலை போட்டு வணங்குகிறார். இதனை பார்த்த சந்தோசத்தில், துள்ளி குதித்த மகனும் பின்னர் அமைதியாகி சாமி கும்பிட்டு கொள்கிறார்.

இந்த வீடியோவை ஐ.ஏ.எஸ். அதிகாரி அவனீஷ் சரண் என்பவர் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டு உள்ளார். அதில், வேறொருவர் பயன்படுத்திய சைக்கிளை வாங்கி வந்த அவர்களது முகத்தில் எவ்வளவு சந்தோசம். அவர்களது மகிழ்ச்சியானது, புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ரக காரை வாங்கியது போன்று வெளிப்படுகிறது என பதிவிட்டு உள்ளார்.

லட்சக்கணக்கானோர் வீடியோவை பார்த்து தங்களது விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒருவர், சிறுவனின் மகிழ்ச்சியான உணர்வுகள் விவரிக்க முடியாதது. உண்மையில் இந்த பூமியில் அதிக வசதியான நபர் அந்த சிறுவனே.

லட்சக்கணக்கானோர் சூழ்ச்சியான இந்த உலகில் தங்களது வாழ்க்கையை நடத்தி செல்லவே எப்போதும் முயற்சி செய்து கொண்டிருக்கும் சூழலில் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாய் கொண்டு செல்கிறான் சிறுவன் என கூறியுள்ளார். அவனீஷின் பதிவுக்கு மற்றொருவர், அவர்கள் ஏழைகள் சார்.

அதனாலேயே ஒவ்வொரு விசயத்திற்கும் மற்றும் மக்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்கிறார்கள். இதுவே பணக்காரர் ஒருவரிடம் இதுபற்றி கேட்டால், அது தனது அடிமை என்றும் பணம் கொடுத்து நான் வாங்கியுள்ளேன். அதனால் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என கூறி அதனை உதைக்கவும் செய்வார். இதுவே ஏழைக்கும், பணக்காரருக்கும் உள்ள நன்மதிப்புகளின் வித்தியாசம் என கூறியுள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!