குடித்து விட்டு தாயுடன் தகராறு செய்வதை கண்டித்ததால் ஆத்திரத்தில் 2 மகள்களை அடித்துக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
சென்னை காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த குண்ணவாக்கம் அருகே உள்ள சின்ன மதுரபாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 42). பெயிண்டர். இவருடைய மனைவி கீதா(35). இவர்களுக்கு நந்தினி (16), நதியா (15), தீபா(8) என 3 மகள்களும், தீனா (10) என்ற மகனும் உள்ளனர்.
இவர்களில் நதியா, சில மாதங்களுக்கு முன்பு தீக்குளித்து இறந்ததாக கூறப்படுகிறது. கோவிந்தராஜனின் மனைவி கீதா, வாலாஜாபாத் ஊத்துக்காடு பகுதியில் குடோனில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நந்தினி, வாலாஜாபாத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
தீனா தாழம்பட்டு பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். தீபா, அதே பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் கோவிந்தராஜ் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கீதா, வேலைக்கு சென்று விட்டார். அதன்பிறகும் கோவிந்தராஜ் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மூத்த மகள் நந்தினி, “எப்போதும் குடித்து விட்டு வந்து தகராறு செய்கிறாயே . அம்மா வேலைக்கு சென்று வருகிறார். நீ வேலைக்கு போகாமல் ஏன் குடித்துவிட்டு அம்மாவுடன் தகராறு செய்கிறாய்” என தந்தையை கண்டித்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், கட்டையால் நந்தினியை தலையில் அடித்ததுடன், கழுத்தை இறுக்கினார். சத்தம் கேட்டு ஓடிவந்த இளைய மகள் தீபாவையும் கட்டையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த நந்தினியும், தீபாவும் வலி தாங்க முடியாமல் துடிதுடித்து ரத்தவெள்ளத்தில் சரிந்தனர்.
சிறிது நேரத்தில் தீபா பரிதாபமாக உயிரிழந்தார். வெளியில் விளையாட சென்ற தீனா வீட்டுக்கு வந்து பார்த்த போது ரத்தவெள்ளத்தில் சகோதரிகள் கிடப்பதை பார்த்து கூச்சலிட்டு கதறினான் . சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நந்தினியை மீட்டு ஒரகடம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையில் மகள்களை கொன்றுவிட்டு தப்பி ஓடிய கோவிந்தராஜ், ஒரகடம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!