ஏரியில் குதித்து உயிரை மாய்த்த அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர்!

சிவமொக்கா அருகே ஏரியில் குதித்து அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஆஸ்பத்திரி டாக்டர்

சிவமொக்கா டவுன் சாகர் நகரை சேர்ந்தவர் ஷர்மதா(வயது 36). இவர், சாகர் ஆரம்ப சுகாதார ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து சுனில் என்ற கணவரும், 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இவரது கணவர் சுனில் சாகர் தாலுகாவில் பீமனகோனே கிராம பஞ்சாயத்து அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஷர்மதா வீட்டில் இருந்து தனது மொபட்டில் ஒரு வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார்.

ஏரியில் குதித்து தற்கொலை

அப்போது அவர் சாகர் நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஏரிக்கரையோரம் மொபட்டை நிறுத்திவிட்டு கீேழ இறங்கியுள்ளார். பின்னர் காலனியை கழற்றி வைத்துவிட்டு ஷர்மதா ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், ஏரியில் இறங்கி ஷர்மதாவை மீட்டனர். பின்னர் உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஷர்மதா பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே வெளியே சென்ற ஷர்மதா வீடு திரும்பவில்லை என கணவர் சுனில், குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடிபார்த்துள்ளனர். ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட விஷயம் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்து அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்தனர்.

சோகம்

ஷர்மதா என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்று தெரியவில்லை. இதுகுறித்து சாகர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!