ஃபேஸ்புக் அறிமுகம் செய்த புதிய சேவை- பணமும் சம்பாதிக்கலாம்!

சமீபத்தில் ஃபேஸ்புக் பயனர்கள் பலர் டிக்டாக்கில் இணைந்தனர். அவர்களை மீண்டும் பெறுவதற்கு ஃபேஸ்புக் முயற்சி செய்து வருகிறது.

மெட்டா நிறுவனம் இன்று முதல் ஃபேஸ்புக் ரீல்ஸ் சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த ரீல்ஸ் சேவை இன்று முதல் பேஸ்புக் செயலியிலும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 150 நாடுகளில் இந்த பேஸ்புக் ரீல்ஸ் சேவை அறிமுகமாகியுள்ளது.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், ரீல்ஸ் வகை வீடியோக்கள் இன்று உலகம் முழுவதும் பெரும் வளர்ச்சியை கண்டு வருகின்றன. இதையடுத்து இன்று முதல் ரீல்ஸ் சேவை பேஸ்புக்கிலும் கிடைக்கும் என கூறினார்.

மெட்டா நிறுவனம் ரீல்ஸ் வீடியோவை உருவாக்குபவர்களுக்காக புதிய எடிட்டிங் சேவையையும் வழங்குகிறது. இதில் ரீமிக்ஸ், டிராஃப்ட், வீடியோ கிளிப்பிங் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும்.

இதுகுறித்து பேஸ்புக் கூறுகையில், இந்த ரீமிக்ஸ் அம்சத்தின் மூலம் பயனர்கள் புதிய ரீல்ஸ் வீடியோக்களையும் உருவாக்கலாம், அதேசமயம் ஏற்கனவே பகிரப்பட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும் எடிட் செய்யலாம். டிராப்ட் அம்சத்தில் ரீல் வீடியோக்களை பயனர்கள் சேகரித்து வைக்கலாம். வீடியோ கிளிப்பிங் அம்சத்தில் நீளமான வீடியோக்களை உருவாக்கலாம் என தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் 60 நொடிகளுக்கு ரீல் வீடியோக்களை உருவாக்கும் வகையில் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் ஸ்டோரிஸ், வாட்ச், நியூஸ் ஃபீட் ஆகிய இடங்களில் ரீல்ஸ் சேவை காண கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் ரீல் வீடியோ உருவாக்குபவர்களுக்கு மானிடைசேஷன் அம்சத்தையும் வழங்கியுள்ளது. இதன்மூலம் ரீல்ஸ் வீடியோ உருவாக்குபவர்கள் வருமானமும் பெறலாம்.

தகுதியான நாடுகளில் இருந்து வரும் ரீல்ஸ் வீடியோக்களுக்கு சிறப்பு தொகை வழங்குவதற்காக ரூ.26 லட்சம் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரீல்ஸ் மூலம் பல்வேறு வகையில் விளம்பரம் செய்யும் செயல்பாட்டையும் பேஸ்புக் சோதனை செய்து வருகிறது.

இந்த ரீல்ஸ் சேவையை ஃபேஸ்புக் அறிமுகம் செய்வதற்கு காரணம் அதன் தினசரி பயனர்கள் சமீபத்தில் குறைந்ததே என கூறப்படுகிறது. பேஸ்புக்கிற்கு கடும் போட்டியாக டிக்டாக் நிறுவனம் நிலவி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் டிக்டாக் அதீத வளர்ச்சியை சந்தித்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயனர்கள் டிக்டாக்கில் இணைந்து வருகின்றனர்.

இதனால் டிக்டாக் போலவே உள்ள ரீல்ஸ் சேவையை பேஸ்புக்கிலும் அறிமுகம் செய்வதற்கான சூழ்நிலையில் அந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் தான் இழந்த பயனர்களை மீண்டும் பெறலாம் என பேஸ்புக் நம்பி வருகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!