ரஜினியின் சின்னத்தில் மீண்டும் ஏற்பட்ட மாற்றம்…!


தாமரையை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பாபா சின்னத்தில் பாம்பு உருவமும் நீக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

ரஜினி ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. ஆன்லைன் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது.

முதல்கட்டமாக மாநில அளவில் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். முதலில் வேலூர் மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

நேற்று நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரஜினி மக்கள் மன்றம் மூலம் அதிக எண்ணிக்கையில் பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று ரஜினி உத்தரவிட்டுள்ளார்.

எனவே பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க ரஜினி ரசிகர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள். மகளிர் அணி அமைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இளைஞர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

விவசாயிகள் அணி அமைத்து அவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரஜினி தனது கட்சி பற்றி அறிவிக்கும்போது “நான் நடத்த இருப்பது ஆன்மீக அரசியல்” என்று கூறினார்.

இது பெரிய விமர்சனத்துக்குள்ளானது. ரஜினி வெளியிட்ட பாபா சின்னத்தில் தாமரை, பாம்பு ஆகியவற்றுடன் பாபா முத்திரை இடம் பெற்றிருந்தது. தாமரை பா.ஜனதா சின்னம். எனவே முதலில் பாபா சின்னத்தில் இருந்த தாமரை அகற்றப்பட்டது.

பின்னர் பாம்பு உருவத்துடன் இருந்த பாபா முத்திரை கொண்ட சின்னம் பயன்படுத்தப்பட்டது. இப்போது ரஜினியின் மக்கள் மன்றம் வெளியிட்ட அறிவிப்பில் பாபா சின்னத்தில் இருந்த பாம்பு உருவமும் நீக்கப்பட்டு விட்டது.

இப்போது பாபா முத்திரை கொண்ட கை மட்டுமே இடம் பெற்றுள்ளது. அத்துடன் உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. ஆன்மீக சர்ச்சை காரணமாகவே பாபா சின்னத்தில் இருந்த பாம்பு உருவம் நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!