இன்று இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவு தினம்…!


இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் 15-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்ற ஊரில் 1961-ம் ஆண்டு ஜூலை1-ந்தேதி கல்பனா சாவ்லா பிறந்தார். கல்பனா சாவ்லா தனது கல்வியை கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் தொடங்கினார்.

அவர் 1982-ம் ஆண்டு, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோனாட்டிக் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார்.

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப்பட்டத்தை 1984-ம் ஆண்டு பெற்றார். அதன் பின்னர் பௌல்தேரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் 1986-ல் இரண்டாம் முதுகலைப் பட்டமும், 1988-ம் ஆண்டு விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

1996-ம் ஆண்டு அவரது முதல் விண்வெளிப் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனா தனது முதல் பயணத்திற்கு ஆயத்தமானார்.


1997-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் நாள் விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். விண்வெளிக்கு சென்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை சாவ்லா பெற்றார்.

அதன் பின் கொலம்பிய விண்வெளி ஊர்தியில் 2003 ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி சாவ்லா உட்பட 7 பேர் கொண்ட குழு விண்வெளிக்கு கிளம்பியது.

தனது ஆராய்ச்சியை முடித்து விட்டு பிப்ரவரி 1-ம் தேதி திரும்பிய போது விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தரையிறங்குவதற்கு 6 நிமிடங்களுக்கு முன்னர் வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் கல்பனா சாவ்லா உட்பட 7 பேரும் மரணமடைந்தனர். கல்பனா சாவ்லாவின் விருப்பத்திற்கு ஏற்ப அவரது உடல் அமெரிக்காவின் உட்டாவில் உள்ள தேசிய பூங்காவில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று கல்பனாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கல்பனா சாவ்லாவின் சாதனைகளை இன்று அனைவரும் நினைவு கூர்வோம். – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!