உல்லாசம் அனுபவிக்கும் குழு – 2 ஆண்டுகளுக்கு முன்பே புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை!

மனைவிகளை மாற்றி உல்லாசம் காணும் குழு குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பே புகார் கொடுக்கப்பட்டும் அது குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் உள்ள மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் குழுவில் தமிழக பிரமுகர்கள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காத தகவலும் வெளியாகி உள்ளது.

கேரளாவில் ‘கப்பிள் சுவாப்பிங்’, ‘ஒய்ப் சுவாப்பிங்’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்கள் மூலமாக மனைவிகளை மற்றவர்களுக்கு மாற்றிக்கொடுத்து உல்லாசம் அனுபவிக்கும் குழுக்கள் குறித்தான பரபரப்பு தகவல் அண்மையில் வெளியானது. சுமார் 2 ஆயிரம் தம்பதிகள் இதுபோன்ற குழுக்களில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியை அடுத்த கருகச்சால் என்ற இடத்தை சேர்ந்த, பாதிக்கப்பட்ட இளம் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கருகச்சால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக புகார் கொடுத்த இளம் பெண்ணின் கணவர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மனைவிகளை மாற்றி உல்லாசம் காண 14 குழுக்கள் சமூக வலைத்தளத்தில் இயங்கி வந்தது தெரியவந்தது. இதற்கிடையே கும்பலில் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில் கொச்சியில் மாநில மகளிர் ஆணைய தலைவி பி.சதி தேவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கப்பிள் சுவாப்பிங், ஒய்ப் சுவாப்பிங் சமூக வலைத்தள கும்பல் குறித்தான முழு விவரங்களையும் வெளிக்கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த குழுக்களால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், கணவர் உட்பட பல்வேறு ஆண்களால் சொல்லி மாளாத பல இன்னல்களை அனுபவித்து உள்ளார். இது போல் ஆயிரக்கணக்காக பெண்கள் இந்த அநாகரீக வலையில் சிக்கி சீரழிக்கப்பட்டு இருக்கலாம். இளம்பெண்ணின் துணிச்சல்மிக்க புகாரின் பேரிலேயே இந்த சமூக விரோத செயல்பாடுகள் வெளிஉலகுக்கு தெரிய வந்துள்ளது.

மாநில போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் உயர் மட்ட குழு அமைத்து மனைவிகளை கைமாற்றும் சமூகவிரோத கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கும்பல் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பே பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கோட்டயம் போலீசில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது புகாரை போலீசார் பொருட்படுத்தவில்லை என்றும் பெண்ணின் கணவரை அழைத்து சமரசம் செய்து வைத்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

மனைவிகளை மாற்றும் சமூக வலைத்தள கும்பல் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பே போலீசாருக்கு தெரிந்து இருந்தும், அதனை போலீசார் கண்டு கொள்ளாமல் விட்டு உள்ளனர். இந்த சமூக வலைத்தள குழுவில் பல முக்கிய புள்ளிகளின் மனைவிகளும் இணைந்து இருந்ததால் அதனை கண்டு கொள்ளாமல் போலீசார் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது.

கேரளா முதல் பல்வேறு மாநிலங்களில் பரவி கிடக்கும் இந்த சமூக வலைத்தள வலையில், தமிழ்நாட்டை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், அவர்களின் மனைவிகளும் சிக்கி இருக்கிறார்கள் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. அவர்களும் இந்த குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டாக்டர்கள், வக்கீல்கள், அரசியல்வாதிகள் என முக்கிய புள்ளிகள் இந்த வலைத்தள இணைப்பில் இருந்ததால் அவர்கள் எங்கு சென்று வந்தாலும் யாரும் கண்டுகொள்ளாத நிலை இருந்து வந்துள்ளது.

இதனால் இந்த புதுமையான பாலியல் பரிமாற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு வலைத்தள குழுக்களாக இணைந்து கிடக்கும் கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க கேரள சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

மனைவிகள் பரிமாற்றம் செய்வது தொடர்பான சமூகவலைத்தள கும்பலில் விரும்பம் இல்லாமல் கணவரின் மிரட்டலுக்கு பயந்தும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனால் தற்போதைய ஆரம்ப கட்ட விசாரணையில், சம்பவத்தில் தொடர்புடைய ஆண்களை மட்டும் தங்களது வலையில் சிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!