மதுரையை கலக்கி வரும் மஞ்சப்பை பரோட்டாக்கள்!

மதுரையை கலக்கி வரும் மஞ்சப்பை பரோட்டாக்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு சமீபத்தில் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக மஞ்சப்பை இயக்கம் ஒன்றை தொடங்கியது.

இதன்படி பொதுமக்கள் வெளியே செல்லும்போது பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக மஞ்சப்பை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் மஞ்சப்பை கலாச்சாரம் இப்போது துளிர் விட தொடங்கி உள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில், கோதுமை மாவில் மஞ்சப்பை வடிவத்தில் பரோட்டா தயாரிக்கப்படுகிறது. அதன் பிறகு இதில் சாஸ் மூலம் “மீண்டும் மஞ்சள் பை” என்ற வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளது.

ஆரப்பாளையம் ஓட்டலில் மஞ்சப்பை புரோட்டா தலா 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. செவ்வக வடிவில் காட்சியளிக்கும் மஞ்சப்பை பரோட்டாவுக்கு பொதுமக்களிடம் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. ஆரப்பாளையம் ஓட்டலில் பார்சல் வாங்க வருபவர்களுக்கு பரோட்டாவுடன் இலவசமாக மஞ்சப்பை வழங்கப்படுகிறது. இது தவிர வாடிக்கையாளர் முகக்கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகம் இருந்தபோது, மதுரை மாட்டுத்தாவணி தனியார் ஓட்டலில் “மாஸ்க் வடிவ பரோட்டா” நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்க அம்சம்.

மதுரையை கலக்கி வரும் மஞ்சப்பை பரோட்டாக்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!