விஷ்ணுவின் கருணையைப் பெற உதவும் ரமா ஏகாதசி விரதம்!

சிறப்பு வாய்ந்தது கார்த்திகை மாதத்தின் தேய்பிறையில் வரும் ரமா ஏகாதசி விரதம். இந்த விரத்தை மேற்கொண்டால், மகாவிஷ்ணுவின் கருணையைப் பெற முடியும்.


ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் வரும். இப்படி வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உண்டு. சில வருடத்தில் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. கார்த்திகை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘ரமா’ ஏகாதசி என்பார்கள். இந்த ஏகாதசியின் பெருமையைப் பற்றி, பாண்டவர்களில் முதன்மையானவரான தருமருக்கு, கிருஷ்ண பகவான் எடுத்துரைத்துள்ளார். அவர் சொன்ன கதையை இங்கே பார்ப்போம்.

புராண காலத்தில் முசுகுந்தன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் அனைவரும் இன்புற்று வாழ்ந்தனர். ஆகையால், மன்னனின் உத்தரவுகளை எதிர் கேள்வியின்றி மக்கள் நிறைவேற்றி வந்தனர். ‘நாட்டு மக்கள் அனைவரும் தவறாது ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்’ என்பதும், நாட்டு மக்களுக்கு முசுகுந்த மன்னன் அறிவித்த உத்தரவுகளில் ஒன்று. அதை மக்களும் சிரத்தையுடன் செய்து வந்தனர்.

முசுகுந்தனுக்கு, சந்திரபாகா என்று ஒரு மகள் இருந்தாள். அவளை, சந்திரசேனன் என்ற மன்னனின் மகன் சோபனுக்கு மணம் முடித்துக் கொடுத்திருந்தார். ஒரு முறை சந்திரபாகா தன்னுடைய கணவருடன், தந்தையைப் பார்க்க வந்திருந்தார். அப்போது கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி (ரமா ஏகாதசி) வந்தது. தன்னுடைய நாட்டில் வசிக்கும் அனைவரும் அந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது மன்னனின் உத்தரவு. எனவே சோபனும், அந்த விரதத்தை மேற்கொள்ளும் நிலை உருவானது. ஆனால் விரதம் இருந்தால், அவனது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற நிலை இருந்தது.

தன் கணவனின் நிலையை அறிந்த சந்திரபாகா, அவனை ஏகாதசி விரதம் முடியும் வரை வேறு எங்காவது சென்று தங்கியிருக்கும்படி அறிவுறுத்தினாள். அதற்கு சோபன் மறுத்து விட்டான். “விரதம் இருந்தால், எனக்கு இறப்பு உறுதி என்பதை நான் அறிவேன். ஆனால் வேறு தேசத்தில் போய் தங்கியிருந்தால், விரதத்திற்கு பயந்து போய்விட்டதாக அனைவரும் எள்ளி நகையாடுவர். எனவே விரத்தை நானும் மேற்கொள்கிறேன்” என்று கூறினான்.

அதன்படியே கார்த்திகை தேய்பிறை ஏகாதசி விரதத்தை மேற்கொண்டான். பசியும், தாகமும் அவனை மிகவும் வருத்தியது. அன்றைய இரவு அவனுக்கு மிகவும் வேதனையாக கடந்தது. மறுநாள் பூஜைக்குப் பிறகே உணவு சாப்பிட முடியும். ஆனால் சூரியன் உதிக்கும் முன்பாகவே சோபனின் உயிர் பிரிந்துவிட்டது. இதை அறிந்த முசுகுந்த மன்னன், சோபனின் உடலை நதியில் விட்டு விட்டார். பின்னர் மகளிடம், “உடன்கட்டை ஏற வேண்டாம். ஏகாதசி விரதத்தை நல்ல முறையில் முடி. விஷ்ணுவின் கருணை உன் மீது பதியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்றார்.

ஆனால் சோபன் மேற்கொண்ட ரமா ஏகாதசி விரதத்தின் பயனாக, அவனது உடல் உயிர்பெற்றது. அவன் விஷ்ணுவின் கருணையால், அனைத்து ஐஸ்வர்யங்களும் நிறைந்த, தேவபுரம் என்னும் நகரத்தின் அபதியாக ஆனான். தங்கம், வைரம், வைடூரியம் உள்ளிட்ட விலைஉயர்ந்த மணிகள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தில், அழகிய ஆடை ஆபரணங்களுடன் வீற்றிருந்தான், சோபன். கந்தர்வர்களும், அப்சரஸ்களும், நாட்டியமாடி, இசைபாடி சோபனின் புகழ் பாடினர்.

அதே நேரம் சோபன், தான் இருந்த ஏகாதசி விரதத்தை தெய்வ பக்தி இல்லாமல் செய்த காரணத்தால், அவன் அதிபதியான நகரம் நிலையற்ற தன்மை கொண்டதாக இருந்தது. இந்த நிலையில் ஒரு முனிவரின் மூலமாக, தன் கணவனின் நிலையை அறிந்த சந்திரபாகா, தான் மேற்கொண்ட ஏகாதசி விரதத்தின் பலனைக் கொண்டு, சோபன் ஆளும் நகரத்தை நிலையானதாக மாற்ற உறுதிகொண்டாள். அதன்படியே, தன்னுடைய எட்டு வயது முதல் இதுவரை மேற்கொண்டு வந்த ஏகாதசி விரதங்களின் பலனைக் கொண்டு, சோபனின் நகரத்தை பிரளய காலம் வரை அழியாதபடிக்கு நிலையானதாக மாற்றினாள். பின்னர், தன்னுடைய கணவனுடன் சேர்ந்து அந்த நகரத்தின் ராணியாக வீற்றிருந்து இன்புற்று வாழ்ந்தாள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்தது, கார்த்திகை மாதத்தின் தேய்பிறையில் வரும் ரமா ஏகாதசி விரதம். இந்த விரத்தை மேற்கொண்டால், மகாவிஷ்ணுவின் கருணையைப் பெற முடியும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!