60 பேரிடம் ரூ.4 கோடி சுருட்டிய மோசடி தம்பதி அதிரடி கைது!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 60 பேர்களிடம் ரூ.4 கோடி சுருட்டிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னையில் ஒரு மோசடி சம்பவம் அரங்கேறி உள்ளது. பொதுவாக பொதுமக்களுக்கு அரசு வேலை மீது அதிக மோகம் உள்ளது. பெற்றோர்கள் எப்படியாவது, தங்களது பிள்ளைகளை அரசாங்க உத்தியோகத்தில் சேர்த்து விடுவதை கனவாக நினைக்கிறார்கள். அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்க தயாராக இருக்கிறார்கள்.

இந்த சித்தாந்தத்தை அடிப்படையாக வைத்துதான் மோசடி நபர்கள் தோன்றுகிறார்கள். இதுபோன்ற மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள். இருந்தாலும் காளான் போல இதுபோன்ற மோசடிகள் முளைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆன்லைன் தகவல் தொடர்பு வளர்ந்து விட்ட பிறகு இதுபோன்ற மோசடிகள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

மோசடி தம்பதி

இது போன்ற மோசடி லீலைகள் புரிவதற்கு பெரிய அளவில் படிப்பறிவு தேவை இல்லை என்பதை சென்னையில் ரவிச்சந்திரபிரபு (வயது 51)-சசிபிரியா (43) என்ற மோசடி தம்பதி நிரூபித்து இருக்கிறார்கள். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரபிரபு. 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், சொந்தமாக பெட்டிக்கடை நடத்தி வந்தார். சசிபிரியா, பிளஸ்-2 வரை படித்தவர். ஆனால் நுனிநாக்கில் ஆங்கிலம் சரளமாக பேசுவார்.

மக்களின் அரசு வேலை மோகத்தை தங்களது மோசடி வித்தைகளுக்கு இவர்கள் தங்களது மூலதனமாக எடுத்துக் கொண்டார்கள். அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் பறிக்கும் தொழிலை கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கினார்கள். இதற்காக சென்னை ஆழ்வார்திருநகரில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்கள். தங்களது மோசடி வித்தைக்கு பலிகடாவாகப்போகும் நபர்களை ஆசை காட்டி அழைத்து வர, ஏராளமான ஏஜெண்டுகளை தமிழகம் முழுவதும் நியமித்தார்கள். அவர்களுக்கு, ஆட்களை அழைத்து வர கமிஷன் உண்டு.

ரவிச்சந்திரபிரபுவும், அவரது மனைவியும் தங்களது நடை-உடை பாவனைகளை மாற்றிக்கொண்டனர். ஆடம்பர பங்களாக்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அதை தங்களது சொந்த வீடு என்று காட்டிக்கொள்வார்கள். அமைச்சர்கள், அதிகாரிகளை தங்களுக்கு தெரியும் என்றும், எளிதில் அரசு வேலை வாங்கித்தர முடியும் என்றும் பந்தா காட்டுவார்கள். போலியான அரசு ஆணைகள் தயார் செய்து வைத்திருப்பார்கள். அதை காட்டி ஏமாறுபவர்களை நம்ப வைப்பார்கள்.

ரூ.4 கோடி மோசடி

மத்திய-மாநில அரசு வேலை வாங்கி தருவதாக இவர்கள் கதை விடுவார்கள். வேலைக்கு தகுந்த மாதிரி தொகையை நிர்ணயிப்பார்கள். காந்தா என்பவரின் மகனுக்கு மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் பெற்றுள்ளனர். ஆசிரியர் வேலை, நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலையில் என்ஜினீயர் வேலை, மின்சார வாரியம், அறநிலையத்துறைகளில் வேலை வாங்கி தருவதாக லட்சங்களை கறந்துள்ளனர்.

திருவாரூரைச் சேர்ந்த இருவரிடம் தலா ரூ.16 லட்சம் வீதம் ரூ.32 லட்சத்தை ஏப்பம் போட்டுள்ளனர். சோழிங்கரைச் சேர்ந்த 7 பேர்களிடம் நீதிமன்றத்தில் ஊழியர் வேலை பெற்றுத்தருவதாக, ரூ.40 லட்சம் சுருட்டி உள்ளனர். இதுபோல 60 பேர்களிடம் ரூ.4 கோடி வரை மோசடி செய்துள்ளனர். ஆனால் மோசம் போன 25 பேர்கள் மட்டும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கலாராணி தலைமையிலான தனிப்படை போலீசார் இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மோசடி தம்பதி கைது

மோசடி தம்பதியான ரவிச்சந்திரபிரபு, சசிபிரியா இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களின் மகளும் இந்த மோசடிக்கு துணை போனதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதும், ஏராளமான ஏஜெண்டுகள் மீதும் கைது நடவடிக்கை பாயும் என்று போலீசார் தெரிவித்தனர்.

அவர்கள் நடத்திய அலுவலகத்தில் சோதனை போட்டு, ஏராளமான போலி அரசாணை நகல்கள், லேப்-டாப் மற்றும் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!