கடத்தப்பட்ட அரிசி ஆலை உரிமையாளரின் மகன் – ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்டது எப்படி.?

காங்கேயம் அருகே கடத்தப்பட்ட அரிசி ஆலை உரிமையாளரின் மகன் ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கேயம் அருகே கடத்தப்பட்ட அரிசி ஆலை உரிமையாளரின் மகன் ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நேற்று 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அரிசி ஆலை உரிமையாளர் மகன்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரிசி ஆலை நடத்தி வருபவர் தொழிலதிபர் ஈஸ்வரமூர்த்தி. இவருக்கு சொந்தமாக காங்கேயத்தில் பிரமாண்டமான திருமண மண்டபமும் உள்ளது. இவரது மகன் சிவ பிரதீப் (வயது 22). இவர் அரிசி ஆலையை நிர்வகித்து வருகிறார்.


நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் சிவபிரதீப் ஒரு காரில் காங்கேயம் அருகே பாப்பினி-வீரசோழபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் சதாம் உசேன் (27) ஓட்டிச்சென்றார். அப்போது, எதிரே வேறு ஒரு காரில் வந்த 7 பேர் கும்பல் சிவபிரதீப்பின் காரை தடுத்து நிறுத்தினர். அவர்களில் காரை ஓட்டி வந்தவர் மட்டும் காக்கி உடையில் இருந்தார். அவர்கள், தங்களை ராமநாதபுரம் போலீசார் என்று கூறியதுடன், தாங்கள் ஓட்டி வந்த காரில் சிவபிரதீப்பையும், அவரது டிரைவரையும் ஏற்றி கைகளை பின்னால் கட்டிப்போட்டு கடத்திக்கொண்டு சென்றனர். சிவபிரதீப் வந்த காரை ஒருவர் உடன் கொண்டு சென்றார்.


ரூ.3 கோடி
பின்னர் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பகுதிக்கு கடத்திச் சென்று, சிவபிரதீப்பின் டிரைவர் சதாம் உசேனின் செல்போனை வாங்கி, சிவபிரதீப்பின் தந்தை ஈஸ்வரமூர்த்திக்கு போன் செய்து ரூ.3 கோடி கேட்டு மிரட்டினர். பணம் கொடுக்காவிட்டாலோ, அல்லது போலீசுக்கு தகவல் தெரிவித்தாலோ சிவபிரதீப்பை கொன்று புதைத்து விடுவதாகவும் தெரிவித்தனர்.


இதனைத் தொடர்ந்து ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவருடைய மாமா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் அந்த கும்பல் கூறியபடி திண்டுக்கல் பைபாஸ் சாலையில் குறிப்பிட்ட இடத்துக்கு பணத்தை கொண்டு சென்றனர். அங்கு நின்றிருந்த அந்த கும்பல் பணத்தை வாங்கி வரும்படி சதாம் உசேனை அனுப்பினர். அதன்படி ரூ.3 கோடியை 3 அரிசிப் பைகளில் ஈஸ்வரமூர்த்தி கொடுத்தார்.
அதை வாங்கிய அந்த கும்பல் மீண்டும் காரில் சிவபிரதீப், சதாம் உசேனை அழைத்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும் அந்த கும்பல் பணத்துடன் இறங்கிக்கொண்டு சிவபிரதீப், சதாம் உசேன் ஆகியோரை விடுவித்து விட்டு பணத்துடன் பின்னால் வந்த தங்கள் காரில் ஏறி தப்பிச்சென்றனர். பின்னர் இது குறித்து, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாயிடம் அவர்கள் புகார் செய்தனர்.


5 பேர் கைது
காரில் கடத்திச்சென்ற போது, கடத்தல் கும்பல் பேசியதை வைத்து, கடத்திய நபர்களின் பெயரையும் சிவபிரதீப் போலீசில் தெரிவித்தார். இதை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடிவந்தனர்.
இதனைத் தொடர்ந்து காங்கேயம் தனிப்படை போலீசார் நேற்று இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட திண்டிவனம் குலமங்கலம் பகுதியை சேர்ந்த நடேசன் என்பவரின் மகன் சக்திவேல் (37), மதுரையை சேர்ந்த ஆரோக்கிய சாமி என்பவரின் மகன் அகஸ்டின் (45), ஆந்திர மாநிலம், நெல்லூர், ஏ.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த எஸ்திராஜ் என்பவரின் மகன் பாலாஜி (38) ஆகிய 3 பேரை மதுரையில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த பசீர் (32) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புைடய கிருஷ்ணகிரி பழையபேட்டை முகமது கவுஸ் சாகிப் பாய் தெருவை சேர்ந்த சையத் அகமதுல்லா(45) என்பவரை நேற்று இரவு போலீசார் ைகது செய்தனர். இ்தையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 89 லட்சத்து 94 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


2 பேருக்கு வலைவீச்சு
இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மீதமுள்ள மதுரையை சேர்ந்த பாலன், நத்தம் பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் ஆகிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காங்கேயம் அருகே கடத்தப்பட்ட அரிசி ஆலை உரிமையாளரின் மகன் ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!